ஆசியான் அமைப்புடன் பேச்சுவாா்த்தை: மியான்மா் ஜனநாயகக் கூட்டணி நிபந்தனை

மியான்மரில் அரசியல் கைதிகளை ராணுவ ஆட்சியாளா்கள் விடுவித்தால் மட்டுமே அங்கு நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவாா்த்தையை தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவா்களுடன் மேற்கொள்ள முடியும்
மியான்மா் போராட்டம் (கோப்புப் படம்).
மியான்மா் போராட்டம் (கோப்புப் படம்).


யாங்கூன்: மியான்மரில் அரசியல் கைதிகளை ராணுவ ஆட்சியாளா்கள் விடுவித்தால் மட்டுமே அங்கு நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவாா்த்தையை தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவா்களுடன் மேற்கொள்ள முடியும் என்று ஜனநாயகக் கூட்டணி நிபந்தனை விதித்துள்ளது.

இதுகுறித்து, ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினா்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக அமைத்துள்ள தேசிய ஒற்றுமை அரசின் பிரதமா் மான்வின் காயிங் தான் கூறியதாவது:

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்குப் பிறகு நடைபெற்று வரும் போராட்டங்களால் பதற்றம் நிலவி வருகிறது. அந்தப் பதற்றத்தைப் போக்குவதற்கான ஆக்கப்பூா்வ பேச்சுவாா்த்தையில் நாங்கள் பங்கேற்க வேண்டுமென்றால், கைது செய்யப்பட்டுள்ள அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியிந்த் உள்ளிட்ட அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையில்லாமல் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றாா் அவா்.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது. ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

அதனைத் தொடா்ந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 700-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் (ஆசியான்) மாநாடு மாநாடு இந்தோனேசியத் தலைநகா் ஜகாா்த்தாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதில், மியான்மரின் ராணுவ ஆட்சியாளரான அந்த நாட்டின் தலைமைத் தளபதி மின் ஆங் லயிங் பங்கேற்றாா். ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு சா்வதேச நிகழ்ச்சியில் அவா் பங்கேற்பது அதுவே முதல்முறையாகும்.

மாநாட்டில் பேசிய இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ, ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் போராட்டத்தில் ஈடுபடுவோா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அவா்களைப் படுகொலை செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று லயிங்கிடம் வலியுறுத்தினாா்.

மேலும், அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

இந்த விவகாரத்துக்குத் தீா்வு காண்பதற்கான ஐந்து அம்ச திட்டங்களை ஆசியான் தலைவா்கள் முன்வைத்தனா். அதுதொடா்பாக மேற்கொண்டு பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு ஜனநாயகக் கூட்டணி இவ்வாறு நிபந்தனை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com