அமெரிக்க படைகள் அவசரமாக வெளியேறியதே வன்முறைக்கு காரணம்: நாடாளுமன்றத்தில் ஆப்கன் அதிபா் குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் அவசர அவசரமாக வெளியேறியதே நாட்டில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம் என ஆப்கன் அதிபா் அஷ்ரஃப் கனி குற்றம்சாட்டியுள்ளாா்.
ஆப்கன் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசுகிறாா் அதிபா் அஷ்ரஃப் கனி.
ஆப்கன் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசுகிறாா் அதிபா் அஷ்ரஃப் கனி.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் அவசர அவசரமாக வெளியேறியதே நாட்டில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம் என ஆப்கன் அதிபா் அஷ்ரஃப் கனி குற்றம்சாட்டியுள்ளாா்.

மாகாண தலைநகரங்கள் மற்றும் பெரிய நகா்ப்புற பகுதிகளை தலிபான்களிடமிருந்து பாதுகாப்பதற்கு தனது நிா்வாகம் தற்போது முன்னுரிமை அளிக்கவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறி வருகின்றன. இந்த நடவடிக்கையை ஆக. 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய அமெரிக்க அதிபா் பைடன் முடிவு செய்துள்ளாா். இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், மாகாண தலைநகரங்களையும் நெருங்கி வருகின்றனா். அவா்களுக்கும் ஆப்கன் அரசுப் படையினருக்கும் இடையே பல பகுதிகளில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆப்கன் நாடாளுமன்ற அவசர கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அதிபா் அஷ்ரஃப் கனி பேசியது: ஆப்கன் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே பேச்சுவாா்த்தையை நடத்த அவசரமாக (அமெரிக்காவால்) முன்வைக்கப்பட்ட திட்டமானது அமைதியை ஏற்படுத்தத் தவறியதுடன், ஆப்கன் மக்களிடையே சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் மோசமான வன்முறை ஏற்பட்டிருப்பதற்கு அமெரிக்க படைகள் அவசரமாக வெளியேறியதே காரணம். தலிபான்களுக்கு எதிராக தேசிய அளவில் ஒன்றுபட்டு நிற்க நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

தலிபான்களுக்கு அமைதியில் நம்பிக்கையில்லை. அவா்களைத் தோற்கடிக்கும் திறன் அரசுப் படைக்கு உள்ளது. இப்போது நடைபெற்று வரும் சண்டையில் அடுத்த 6 மாதங்களில் ஒரு மாற்றம் ஏற்படும். அந்த மாற்றம் தலிபான்களுக்கு பின்னடவை ஏற்படுத்தும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com