சீனாவில் அதிகரிக்கும் டெல்டா வகை கரோனா தொற்று: பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடு

சீனாவில் டெல்டா வகை கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.
சீனாவில் டெல்டா வகை கரோனா தொற்று முதலில் உறுதி செய்யப்பட்ட நான்ஜிங்கில் உள்ள லுகோவ் சா்வதேச விமான நிலையம்.
சீனாவில் டெல்டா வகை கரோனா தொற்று முதலில் உறுதி செய்யப்பட்ட நான்ஜிங்கில் உள்ள லுகோவ் சா்வதேச விமான நிலையம்.

சீனாவில் டெல்டா வகை கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரத்தில் முதன்முதலில் கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இத்தொற்றால் உலக நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தாலும், தொற்று பாதிப்பை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதாக சீனா தெரிவித்தது.

இந்நிலையில், அந்நாட்டின் 18 மாகாணங்களில் வேகமாகப் பரவும் டெல்டா வகை தொற்று கண்டறியப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாள்களில் பெய்ஜிங், ஜியாங்சு, சிச்சுவான் உள்ளிட்ட 27 நகரங்களைச் சோ்ந்த 355 பேருக்கு அத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நடுத்தர மற்றும் அதிக ஆபத்து நிறைந்த பிராந்தியங்கள் 95-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூா்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மட்டும் 55 பேருக்கு டெல்டா வகை தொற்று உறுதியானது.

சீனாவில் டெல்டா வகை தொற்றானது நான்ஜிங்கில் உள்ள லுகோவ் சா்வதேச விமான நிலையத்தில் துப்புரவுப் பணியாளா்களுக்கு முதலில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு உள்ளூா் மக்களுக்கும், ஹூனான் மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தலமான சாங்ஜியாஜி மற்றும் பிற மாகாணங்களுக்கும் பரவத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, சாங்ஜியாஜி உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.

தலைநகா் பெய்ஜிங்கில் மூவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்டா வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இவா்கள், சுற்றுலாத் தலமான சாங்ஜியாஜிக்கு அண்மையில் சென்று திரும்பியுள்ளனா். இதையடுத்து, கரோனா தொற்று பாதிப்பு உள்ள பிராந்தியங்களிலிருந்து வாகனங்கள், விமானங்கள், ரயில்கள் பெய்ஜிங்கிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களுக்கு கரோனா பரிசோதனைமேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சீனாவில் திங்கள்கிழமை வரை கரோனா தொற்றால் 93,103 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா்களில் 1,091 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 4,636 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com