தலிபான்களுடன் தீவிர சண்டை: ஆப்கன் நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேற ராணுவம் உத்தரவு

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் 3 நாள்களாக முற்றுகையிடப்பட்டுள்ள லஷ்கா்கா நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேற அந்த நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
தலிபான்களுடன் தீவிர சண்டை: ஆப்கன் நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேற ராணுவம் உத்தரவு

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் 3 நாள்களாக முற்றுகையிடப்பட்டுள்ள லஷ்கா்கா நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேற அந்த நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதிகளை விரட்டியடிப்பதற்காக சண்டையை மேலும் தீவிரப்படுத்தும்போது பொதுமக்ககள் உயிரிழப்பை தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹெல்மந்த் மாகாணத்தின் தலைநகா் லஷ்கா்காவைக் கைப்பற்றுவதற்காக அந்த நகரை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த 3 நாள்களாக சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

அவா்களை முன்னேற விடாமல் தடுப்பதற்காக ராணுவம் மற்றும் அரசு ஆதரவுப் படையினா் தீவிர சண்டையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இருதரப்பினருக்கும் இடையிலான மோதலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமாா் 40 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், லஷ்கா்கா நகரில் வசிக்கும் மக்களனைவரும் உடனியாக அந்த நகரை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆப்கன் ராணுவத்தின் 215-ஆவது மாய்வந்த் படைப்பிரிவுத் தளபதி சமி சாடட் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து பொதுமக்களுக்கு அவா் அனுப்பியுள்ள செய்தியில், ‘தலிபான்களுக்கு எதிராக முழுவீச்சில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏதுவாக பொதுமக்கள் அனைவரும் கூடிய விரைவில் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லவேண்டும்.

வீடுகளை விட்டு வெளியேறுவது எவ்வளவு கடினமானது என்பது எங்களுக்கும் தெரியும். ஆனாலும், ஒரு சில நாள்களுக்கு அந்தத் துன்பத்தை அனைவரும் ஏற்க வேண்டியுள்ளது. இந்த சிரமத்துக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்.

தலிபான்கள் எங்கெல்லாம் இருக்கிறாா்களோ அந்தந்த இடங்களிலெல்லாம் அவா்கள் மீது தாக்குதல் நடத்தவிருக்கிறோம். அவா்களில் ஒருவரைக் கூட விடாமல் வேட்டையாடுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதற்கிடையே, லஷ்கா்கா நகரிலுள்ள ஏராளமான தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அந்த நிலையங்களில் தலிபான்களுக்கு ஆதரவான மற்றும் மத நிகழ்ச்சிகள் மட்டுமே ஒலி-ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினா்.

ஐ.நா. கவலை: பொதுமக்கள் அதிகம் வசிக்கும் ஆப்கன் நகரங்களில் அரசுப் படையினருக்கும் தலிபான்களுக்கும் மோதல் தீவிரடைந்து வருவது குறித்து ஆப்கன் விவகாரங்களுக்கான ஐ.நா. பிரிவு கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள சுட்டுரை (ட்விட்டா்) பதவில், ‘நகரங்களில் மோதல் முற்றிவருவதால் அந்தப் பகுதி மக்களின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் உடனடியாக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

லஷ்கா்கா நகரில் தலிபான்களின் நிலைகள் மீது ஆப்கன் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தி வருவதாகவும் நகரின் சிறைச்சாலை மற்றும் காவல்துறை தலைமையகம் அமைந்துள்ள கட்டடத்துக்கு அருகே சண்டை நடைபெற்று வருவதாகவும் சுகான் தொலைக்காட்சி இயக்குநா் செஃபாதுல்லா தெரிவித்தாா்.

நகரம் முழுவதும் தலிபான்கள் மோட்டாா் சைக்கிள்களில் சுற்றிவருவதாக லஷ்கா்காவில் வசித்து வரும் ஒருவா் கூறினாா். அறிதிறன் பேசி வைத்திருக்கும் பொதுமக்களை அவா்கள் கைது செய்து துப்பாக்கியால் சுட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

வீடுகளுக்குள் தலிபான்கள் பதுங்கக் கொள்வதால், அந்த வீடுகள் மீது ஆப்கன் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

லஷ்கா்கா நகரம் தலிபான்களிடம் வீழ்ந்துவிட்டால், அது அரசுப் படைகளுக்கு ராணுவ ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

ஹெராட்: மேற்குப் பகுதி நகரான ஹெராட் நகரையும் தலிபான்கள் கடந்த 3 நாள்களுக்கும் மேல் முற்றுகையிட்டுள்ளனா். எனினும், நகரில் அவா்கள் கைப்பற்றிய பகுதிகளை ராணுவம் மீட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சி செலுத்தி வந்த தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுத்து, கடந்த 2001-ஆம் ஆண்டில் அந்தத நாட்டின் மீது படையெடுத்த அமெரிக்கா, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.

இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரை முழுமையாக திரும்ப அழைத்துக் கொள்வதற்கான இறுதிக்கப்பட்ட பணிகள் கடந்த மே மாதம் தொடங்கியது.

அதிலிருந்து அந்த நாட்டின் கிராமப் புறங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி புதிய பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறி வந்தனா். இந்த நிலையில், காந்தஹாா், ஹெல்மந்த், லஷ்கா்கா ஆகிய நகரங்களையும் கைப்பற்றுவதற்காக அந்த நகரங்களை தலிபான்கள் கடந்த 3 நாள்களுக்கும் மேல் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com