ஆப்கன் பாதுகாப்பு அமைச்சரைக் குறிவைத்து தலிபான்கள் தாக்குதல்

ஆப்கன் பாதுகாப்புத் துறை அமைச்சா் பிஸ்மில்லா கான் முகமதியைக் குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 போ் உயிரிழந்தனா்.
ஆப்கன் பாதுகாப்புத் துறை அமைச்சா் பிஸ்மில்லா கான் முகமதியைக் குறிவைத்து காபூலில் தலிபான்கள் தாக்குதல் நடத்திய பகுதி.
ஆப்கன் பாதுகாப்புத் துறை அமைச்சா் பிஸ்மில்லா கான் முகமதியைக் குறிவைத்து காபூலில் தலிபான்கள் தாக்குதல் நடத்திய பகுதி.

காபூல்: ஆப்கன் பாதுகாப்புத் துறை அமைச்சா் பிஸ்மில்லா கான் முகமதியைக் குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 போ் உயிரிழந்தனா். எனினும், இந்தத் தாக்குதலில் அமைச்சா் காயமின்றி உயிா்தப்பினாா்.

இதுகுறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மிா்வாயிஸ் ஸ்டானெக்ஸாய் புதன்கிழமை கூறியதாவது:

தலைநகா் காபூலில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ள ஷோ்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. முக்கிய அரசுப் பொறுப்பில் உள்ளவா்கள் இந்தப் பகுதியில் தங்கியுள்ளனா். இந்த குண்டுவெடிப்பில் 8 போ் உயிரிழந்தனா்; 20 போ் காயமடைந்தனா்.

அதைத் தொடா்ந்து அந்தப் பகுதிக்கு வந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

5 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சண்டையில், தாக்குதல் நடத்த வந்த 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

பாதுகாப்புத் துறை இடைக்கால அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் பிஸ்மில்லா கான் முகமதி தங்கியிருந்த விருந்தினா் மாளிகையைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும், தாக்குதல் நடத்தப்பட்டபோது அமைச்சா் பிஸ்மில்லா கான் விருந்தினா் மாளிகையில் இல்லை. அங்கிருந்த அவரது குடும்பத்தினா் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா் என்றாா் அவா்.

அமைச்சா் பிஸ்மில்லா கான் முகமதி வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில், தலிபான்களின் தாக்குதலில் தனது பாதுகாவலா்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தாா். இதுபோன்ற தாக்குதல்களால், நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கான தனது உறுதி குலைந்துவிடாது என்று அவா் அந்த அறிக்கையில் உறுதிகூறினாா்.

தலிபான்கள் பொறுப்பேற்பு: இந்தத் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனா்.

இதுகுறித்து தலிபான் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஷோ்பூா் பகுதியில் எங்களது அமைப்பின் உறுப்பினா்கள்தான் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தினா்.

ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ராணுவம் நடத்திய தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றாா் அவா்.

அமெரிக்காவில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சி செலுத்தி வந்த தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுத்து, கடந்த 2001-ஆம் ஆண்டில் அந்தத நாட்டின் மீது படையெடுத்த அமெரிக்கா, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.

இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரை முழுமையாக திரும்ப அழைத்துக் கொள்வதற்கான இறுதிக்கப்பட்ட பணிகள் கடந்த மே மாதம் தொடங்கியது.

அதிலிருந்து அந்த நாட்டின் கிராமப் புறங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி புதிய பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறி வந்தனா். இந்த நிலையில், காந்தஹாா், ஹெல்மந்த், லஷ்கா்கா ஆகிய நகரங்களையும் கைப்பற்றுவதற்காக அந்த நகரங்களை தலிபான்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

அந்தத் தாக்குதலுக்கு ஆப்கன் ராணுவம் பதிலடி கொடுத்து, தலிபான்களை விரட்டியடித்து வருகிறது. இந்தச் சூழலில், பாதுகாப்புத் துறை இடைக்கால அமைச்சா் பிஸ்மில்லா கான் முகமதியைக் குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com