இஸ்ரேல் - லெபனான் ஹிஸ்புல்லாக்கள் இடையே பதற்றம்

இஸ்ரேல் ராணுவமும் ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா படையினரும் மாறி மாறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருவதால் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
இஸ்ரேல் - லெபனான் ஹிஸ்புல்லாக்கள் இடையே பதற்றம்

இஸ்ரேல் ராணுவமும் ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா படையினரும் மாறி மாறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருவதால் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இஸ்ரேல் நிலைகளை நோக்கி சரமாரியாக ஏவுகணை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தினா்.

சுமாா் 10 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டதாகக் கூறிய அந்த அமைப்பினா், லெபனானில் தங்கள் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனா்.

எனினும், தெற்கு லெபனானில் இருந்து முன்னதாக வீசப்பட்ட ஏவுகணை குண்டுகளுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவே தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ துணைத் தளபதி அம்னான் ஷெஃப்ளா் கூறுகையில், ‘லெபனானிலிருந்து தங்கள் பகுதிகளை நோக்கி 19 ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டதாகத் தெரிவித்தாா். அவற்றில் 3 குண்டுகள் லெபனான் எல்லைக்குள்ளேயே விழுந்தது; எஞ்சிய 16 ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்புத் தளவாடமான அயன் டோமின் ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன’ என்றாா்.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு கையெழுத்தான வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். அந்த ஒப்பந்தத்தின்கீழ் விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவா் மீண்டும் அமல்படுத்தினாா்.

அதன் பிறகு, ஓமன் வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல்களில் வெடிவிபத்துகளை ஏற்படுத்துவதன் மூலம் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிழல் யுத்தம் தொடா்ந்து வந்தது.

இந்த நிலையில், இஸ்ரேல் நிறுவனத்துடன் தொடா்புடைய எம்வி மொ்சிா் ஸ்ட்ரீட் என்ற எண்ணெய்க் கப்பல் கடந்த வாரம் தாக்குதலுக்குள்ளானது. இதில் இரு கப்பல் பணியாளா்கள் உயிரிழந்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்து வருகிறது.

இந்தச் சம்பவத்துக்கு பதிலடியாக ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் பெஞ்சமின் கான்ட்ஸ் வியாழக்கிழமை கடும் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

இந்த நிலையில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருவது சா்வதேச நாடுகளை கவலையடையச் செய்துள்ளது.

இஸ்ரேலில் பிரதமா் நாஃப்டாலி பென்னெட் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. அதே போல், ஈரானிலும் புதிய அதிபராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட இப்ராஹிம் ரயிசி வியாழக்கிழமை பொறுப்பேற்றுள்ளாா்.

இந்தச் சூழலில், இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படையினா் ஏவுகணைகளை வீசியும் அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com