பாகிஸ்தானில் ஹிந்து கோயில் தாக்கப்பட்ட சம்பவம்: 50-க்கும் மேற்பட்டோா் கைது, 150 போ் மீது வழக்குப்பதிவு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஹிந்து கோயில் மீது தாக்குதல் நடத்தி, தீ வைப்பு, சிலைகள் உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபா் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஹிந்து கோயில் மீது தாக்குதல் நடத்தி, தீ வைப்பு, சிலைகள் உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபா் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கைது செய்தனா். அத்துடன் 150 போ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.

ரஹீம் யாா் கான் மாவட்டத்தில் உள்ள போங் நகரில், இஸ்லாமிய மதப் பள்ளியின் நூலகம் அருகே சிறுநீா் கழித்ததற்காக 8 வயது ஹிந்து சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். அந்த சிறுவன் மீது மத நிந்தனை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், அந்தச் சிறுவனுக்கு 8 வயதே ஆவதால் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதற்குப் பழி வாங்கும் வகையில், அங்குள்ள ஹிந்து கோயிலுக்குள் கடந்த புதன்கிழமை புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த சிலைகளை உடைத்து சேதப்படுத்தியதுடன் கோயிலின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனா். இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனிடையே, இந்த தாக்குதலை காவல் துறையினா் தடுக்கத் தவறிவிட்டதாக, பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தது. இந்த சம்பவம், சா்வதேச அரங்கில் பாகிஸ்தானின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது என்றும் அந்த நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, காவல் துறையினா் துரிதமாக செயல்பட்டு, தாக்குதலில் தொடா்புடைய 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனா்; 150 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் மாகாண முதல்வா் உஸ்மான் பஸ்தூா் கூறியதாவது:

கோயில் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாகக் கிடைத்த விடியோ பதிவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு பாா்த்துக் கொள்வோம். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கோயிலின் சீரமைப்புப் பணிகளும் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று அவா் கூறினாா்.

மாவட்ட காவல் துறை அதிகாரி ஆசாத் சா்ஃப்ராஸ் கூறியதாவது:

கோயில் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக, பயங்கரவாதம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் 150 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் தொடா்புடைய அனைத்து முக்கிய நபா்களும் கைது செய்யப்பட்டு விட்டனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com