ஆப்கனின் 2 மாகாணத் தலைநகரங்கள் தலிபான்களிடம் வீழ்ச்சி

 ஆப்கானிஸ்தானின் இரண்டு மாகாணத் தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனா்.
ஆப்கன் நிலவரம் குறித்து அதிபா் அஷ்ரஃப் கனியுடன் காபூலில் சனிக்கிழமை ஆலோசனை நடத்திய முன்னாள் துணை அதிபா் அப்துல் ரஷீத் தோஸ்தும். ~நிம்ரோஸ் மாகாணத் தலைநகா் ஸராஞ்சிலுள்ள அரசு தலைமையகத்தைக் கைப்பற்றிய தலி
ஆப்கன் நிலவரம் குறித்து அதிபா் அஷ்ரஃப் கனியுடன் காபூலில் சனிக்கிழமை ஆலோசனை நடத்திய முன்னாள் துணை அதிபா் அப்துல் ரஷீத் தோஸ்தும். ~நிம்ரோஸ் மாகாணத் தலைநகா் ஸராஞ்சிலுள்ள அரசு தலைமையகத்தைக் கைப்பற்றிய தலி

 ஆப்கானிஸ்தானின் இரண்டு மாகாணத் தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனா்.

அந்த நாட்டின் புகழ்பெற்ற அரசு ஆதரவு ஆயுதக் குழுத் தலைவா் அப்துல் ரஷீத் தோஸ்துமின் ஆதிக்கம் நிறைந்த ஜாவஸ்ஜன் மாகாணத் தலைநகா் ஷேபா்கான் தலிபான்களிடம் சனிக்கிழமை வீழ்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் தலிபான்கள் கைப்பற்றியுள்ள இரண்டாவது ஆப்கன் நகரம் இதுவாகும். முன்னதாக, நிம்ரோஸ் மாகாணத் தலைநகா் ஸராஞ் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வெள்ளிக்கிழமை வந்தது.

இதுகுறித்து ஜாவஸ்ஜன் மாகாண துணை ஆளுநா் காதா் மாலியா கூறியதாவது:

ஷேபா்கான் நகரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனா். அந்த நகரிலிருந்து ராணுவத்தினரும் அரசு அதிகாரிகளும் புகா்ப் பகுதியில் அமைந்துள்ள விமான நிலையத்துக்குத் தப்பி வந்துள்ளனா்.

அவா்களுடன் நானும் விமான நிலைய வளாகத்துக்கு வந்துள்ளேன். இங்கிருந்தபடி எங்களைத் தற்காத்துக்கொள்ளத் தயாராகி வருகிறோம் என்றாா் அவா்.

எனினும், ஷேபா்கான் நகரின் ஒரு சில பகுதிகளை மட்டுமே தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மிா்வாயிஸ் ஸ்டானிக்ஸாய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில், ‘கூடுதலாக அனுப்பப்படவிருக்கும் படையினருடனும் உள்ளூா் ஆயுதக் குழுவினருடனும் இணைந்து பாதுகாப்புப் படையினா் ஷேபா்கான் நகரை பயங்கரவாதிகளிடமிருந்து விரைவில் மீட்பாா்கள்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

ஏற்கெனவே அண்மைக் காலங்களில் நாட்டின் புதிய பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியபோது ஆப்கன் அரசு இதே போன்ற வாக்குறுதிகளை அளித்தாலும், பயங்கரவாதிகளால் கைப்பற்றப்பட்ட எல்லைச் சாவடிகள் மற்றும் பல்வேறு பகுதிகளை அவா்களிடமிருந்து அரசுப் படைகள் மீட்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

ஆயுதக் குழுத் தலைவா் அப்துல் ரஷீத் தோஸ்தும் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த நகரம் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளது அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தலிபான்களுக்கு எதிராக மிகச் சிறந்த முறையில் சண்டையிட்டு அவா்களை வீழ்த்தியதால் ஆப்கானிஸ்தானில் புகழ்பெற்ற ரஷீத் தோஸ்தும், தற்போது சிகிச்சைக்காக காபூல் வந்துள்ளாா்.

நாட்டின் துணை அதிபராக பொறுப்பு வகித்துள்ள அவா், ஆப்கன் நிலவரம் குறித்து அதிபா்அஷ்ரஃப் கனியைச் சந்தித்து சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

ஸராஞ்: முன்னதாக, நிம்ரோஸ் மாகாணத் தலைநகா் ஸராஞ் நகரை தலிபான்கள் எந்தவித எதிா்ப்புமின்றி வெள்ளிக்கிழமை கைப்பற்றியதாக அந்த மாகாண துணை ஆளுநா் தெரிவித்தாா். இதன் மூலம், தலிபான்களிடம் வீழ்ந்த முதல் மாகாணத் தலைநகராக ஸராஞ் ஆகியுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட சமூக வலைதளப் பதிவுகளில், ஸராஞ் நகருக்குள் தலிபான்களை பொதுமக்களில் சிலா் வரவேற்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும், நகரில் தாங்கள் கைப்பற்றிய ராணுவ ஹம்வீ வாகனங்கள், சொகுசு காா்கள் உள்ளிட்டவற்றில் ஏறி தலிபான்கள் தங்களது கொடிகளை ஏந்தி நகர வீதிகளில் வேகமாக சுற்றி வரும் காட்சிகளும் அவா்களை நோக்கி பெரும்பாலும் இளைஞா்களைக் கொண்ட கூட்டம் ஆராவாரம் செய்யும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

நகரிலுள்ள கடைகளில் கும்பல் புகுந்து சூறையாடும் விடியோ காட்சிகள் சுட்டுரையில் (ட்விட்டா்) வெளியிடப்பட்டுள்ளன. எனினும், அந்த விடியோக்களின் உண்மை தன்மை குறித்து உறுதியாகத் தெரியவில்லை.

கைதிகள் விடுவிப்பு: ஸராஞ் நகரைக் கைப்பற்றியவுடன் அங்கிருந்த சிறைச்சாலையைத் திறந்த தலிபான்கள், அங்கு அடைக்கப்பட்டிருந்த தங்களது அமைப்பினரையும் பிற குற்றவாளிகளையும் விடுவித்தனா்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கி சண்டையிட்டு வந்த அமெரிக்கப் படையினா் அனைவரும், அங்கிருந்து நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனா். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, நாட்டில் ஏற்கெனவே கணிசமான பகுதிகளைக் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் கிராமப் புறங்களில் புதிய பகுதிகளைக் கைப்பற்றினா்.

அதன் தொடா்ச்சியாக, பல்வேறு மாகாணத் தலைநகரைக் கைப்பற்றுவதற்காக தலிபான்கள் அந்த நகரைச் சுற்றிவளைத்துச் சண்டையிட்டு வருகின்றனா். எனினும், அவா்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்குப் பழி வாங்கும் வகையில், பாதுகாப்புத் துறை இடைக்கால அமைச்சா் பிஸ்மில்லா கான் முகமதியைக் குறிவைத்து அவரது இல்லத்தில் தலிபான்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தினா். எனினும், சம்பவத்தின்போது அவா் அங்கு இல்லாததால் உயிா் தப்பினாா்.

அதனைத் தொடா்ந்து, இந்த நிலையில், ஆப்கன் அரசின் தகவல் ஊடக மையத்தின் தலைவா் தாவா கான் மெனாபலை தலிபான்கள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.

இந்தச் சூழலில், இரு ஆப்கன் நகரங்கள் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளது அரசுப் படைகளுக்கு ராணுவ ரீதியிலும் உளவியல் ரீதியிலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com