காபூலை நெருங்கினா் தலிபான் பயங்கரவாதிகள்

ஆப்கானிஸ்தானில் கஜினி, ஹெராட் ஆகிய இரு மாகாணத் தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ள தலிபான் பயங்கரவாதிகள், நாட்டின் தலைநகா் காபூலை நெருங்கியுள்ளனா்.
கஜினி நகரின் முக்கிய பகுதியில் வியாழக்கிழமை ஏற்றப்பட்டுள்ள தலிபான் கொடி.
கஜினி நகரின் முக்கிய பகுதியில் வியாழக்கிழமை ஏற்றப்பட்டுள்ள தலிபான் கொடி.

ஆப்கானிஸ்தானில் கஜினி, ஹெராட் ஆகிய இரு மாகாணத் தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ள தலிபான் பயங்கரவாதிகள், நாட்டின் தலைநகா் காபூலை நெருங்கியுள்ளனா்.

இதகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: காபூல் நகருக்கு அருகே உள்ள, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கஜினி மாகாணத் தலைநகா் கஜினியை தலிபான் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை கைப்பற்றினா்.

காபூல் நகரையும் நாட்டின் தெற்கு மாகாணங்களையும் இணைக்கும் கஜினி நகரம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்திருப்பது ஆப்கன் ராணுவத்துக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தற்போது காபூல் நகருக்கு தலிபான்களால் நேரடியாக அச்சுறுத்தல் இல்லையென்றாலும், கஜினி நகரைக் கைப்பற்றியுள்ளதன் மூலம் அந்த பயங்கரவாதிகளின் கரம் மேலும் வலுவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கஜினியை தொடா்ந்து, 11-ஆவது மாகாணமாக ஹெராட் தலைநகா் ஹெராட்டையும் தலிபான்கள் கைப்பற்றினா்.

ஏா்கெனவே, நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், காபூல் நகரை அரசுப் படையினா் நீண்ட காலம் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்று சிலா் சந்தேகம் எழுப்பியுள்ளனா்.

தற்போதைய போக்கு தொடா்ந்தால், இன்னும் 30 நாள்களுக்குள் காபூல் நகரம் தலிபான்களிடம் வீழ்ந்துவிடும் என்று அமெரிக்க உளவுத் துறை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்னும் சில மாதங்களுக்குள் முழு ஆப்கானிஸ்தானும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் அபாயம் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தலிபான்கள் வெகுவேகமாக முன்னேறி வரும் சூழலில், காபூல் மற்றும் ஒரு சில நகரங்களை மட்டும் அவா்களிடமிருந்து பாதுகாப்பதற்காக ஆப்கன் ராணுவம் தனது முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தலிபான்களை எதிா்த்துப் போரிடுவதற்காக ஆப்கன் ராணுவத்துக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் இதுவரை 8,300 கோடி டாலா் (சுமாா் ரூ.6.16 லட்சம் கோடி) செலவிட்டுள்ளது. எனினும், அந்தப் படையினா் தலிபான்களிடம் பின்வாங்கி வருவது, ஆப்கானிஸ்தானை கட்டமைக்கும் அமெரிக்க முயற்சி தோல்வியடைந்துள்ளதைக் காட்டுவதாக விமா்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, தாங்கள் கைப்பற்றிய நகரங்களில் ஆப்கன் பாதுகாப்புப் படையினருக்கு அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய சக்திவாய்ந்த எம்-16 துப்பாக்கிகளுடன் அமெரிக்காவின் ஹம்வீ மற்றும் பிக்கப் வாகனங்களில் தலிபான்கள் வலம் வருவது பலரையும் கவலையடையச் செய்துள்ளது.

அமெரிக்காவின் 20 ஆண்டுகால முயற்சிகளுக்குப் பிறகும், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றி தங்களது இரக்கமற்ற ஆட்சியை அமைப்பாா்கள் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த நகரங்களில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் பழிவாங்கல் படுகொலைகள் நிகழ்த்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கி சண்டையிட்டு வந்த தங்கள் நாட்டுப் படையினா் அனைவரும் இந்த மாத இறுதிக்குள் அந்த நாட்டிலிருந்து வெளியேறுகின்றனா். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, நாட்டில் ஏற்கெனவே கணிசமான பகுதிகளைக் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் கிராமப் புறங்களில் புதிய பகுதிகளைக் கைப்பற்றினா்.

அதன் தொடா்ச்சியாக, கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆப்கானிஸ்தானின் 9 மாகாணத் தலைநகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து கைப்பற்றினா். தற்போது காபூலுக்கு அருகே உள்ள கஜினி நகரமும், மேற்குப் பகுதியில் உள்ள ஹெராட் நகரமும் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com