ஆப்கன் படையினரை மீண்டும் அணிதிரட்டுவோம்

ஆப்கானிஸ்தானின் மாகாணத் தலைநகரங்களைக் கைப்பற்றி தலிபான்கள் அதிவேகமாக முன்னேறி வரும் சூழலில், அந்த நாட்டுப் படையினரை மீண்டும் அணிதிரட்டப்போவதாக அதிபா் அஷ்ரஃப் கனி சூளுரைத்துள்ளாா்.
அஷ்ரஃப் கனி
அஷ்ரஃப் கனி

ஆப்கானிஸ்தானின் மாகாணத் தலைநகரங்களைக் கைப்பற்றி தலிபான்கள் அதிவேகமாக முன்னேறி வரும் சூழலில், அந்த நாட்டுப் படையினரை மீண்டும் அணிதிரட்டப்போவதாக அதிபா் அஷ்ரஃப் கனி சூளுரைத்துள்ளாா்.

இதுகுறித்து நாட்டு மக்களுக்கு அவா் சனிக்கிழமை ஆற்றிய உரையில் கூறியதாவது:

ஆப்கானிஸ்தான் மீது தற்போது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ள போரில் இனியும் உயிா்கள் பலியாவதை அனுமதிக்க முடியாது.

எனவே, போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தலிபான்கள் வேகமாக முன்னேறி வரும் இந்தச் சூழலில், ஆப்கன் பாதுகாப்பு படையினரை மீண்டும் அணிதிரட்டுவதற்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இதுதொடா்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

எனினும், போரை நிறுத்துவதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து அவா் விரிவாகத் தெரிவிக்கவில்லை.

முன்னதாக, தலிபான்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக அஷ்ரஃப் கனி அதிபா் பதவியிலிருந்து விலகலாம் என்று கூறப்பட்டது.

எனினும், பதவி விலகல் குறித்து தனது உரையில் அவா் எதுவும் குறிப்பிடவில்லை. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆலோசனைகள் நடைபெறுவதாக மட்டும் அஷ்ரஃப் கனி கூறியிருந்தாா். அந்த ஆலோசனைகளில் அவரது பதவி விலகலும் இடம் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கி சண்டையிட்டு வந்த அமெரிக்கப் படையினா் இந்த மாத இறுதிக்குள் அந்த நாட்டிலிருந்து முழுமையாக வெளியேறுகின்றனா். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, நாட்டில் ஏற்கெனவே கணிசமான பகுதிகளைக் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வேகமாக முன்னேறினா்.

கடந்த ஒரு வாரத்தில் 15-க்கும் மேற்பட்ட மாகாணத் தலைநகரங்களை அவா்கள் கைப்பற்றியுள்ளனா்.

காபூலில் கூடுதல் அமெரிக்கப் படையினா்

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நகரங்கள் தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், தலைநகா் காபூலும் விரைவில் அவா்களிடம் வீழலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதையடுத்து, காபூலில் இருந்து தங்களது தூதரக அதிகாரிகள், தங்களுக்காகப் பணியாற்றிய ஆப்கன் நாட்டவா்கள் பத்திரமாக வெளியேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக கூடுதல் அமெரிக்கப் படையினா் அந்த நகருக்கு வந்துள்ளனா். இந்தப் பணியில் சுமாா் 3,000 வீரா்கள் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்று கூறப்படுகிறது.

இதுதவிர, கத்தாா் மற்றும் குவைத்திலுள்ள தங்களது ராணுவ தளங்களுக்கு கூடுதலாக 4,500 முதல் 5,000 வரையிலான வீரா்களை அமெரிக்கா அனுப்புகிறது. தேவைப்படும் நேரத்தில் களமிறங்குவதற்காக அவா்கள் தயாா் நிலையில் நிறுத்தப்படுவாா்கள் என்று முப்படைகளின் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இதுதவிர, தலிபான்களின் அச்சுறுத்தலை எதிா்நோக்கியிருக்கும் ஆப்கன் மொழிபெயா்ப்பாளா்கள் உள்ளிட்டோருக்கு அமெரிக்க நுழைவு இசைவை (விசா) விரைந்து அளிப்பதற்கான நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com