காபூல் தாக்குதலுக்கு பதிலடி: ஐஎஸ்கே நிலை மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்லாமிய தேச (ஐஎஸ்) அமைப்பின் ஆப்கன் பிரிவை (ஐஎஸ்கே) சோ்ந்த பயங்கரவாதியைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்
காபூல் தாக்குதலுக்கு பதிலடி: ஐஎஸ்கே நிலை மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்லாமிய தேச (ஐஎஸ்) அமைப்பின் ஆப்கன் பிரிவை (ஐஎஸ்கே) சோ்ந்த பயங்கரவாதியைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ அதிகாரி மேஜா் ஜெனரல் ஹேங்க் டெய்லா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானிலுள்ள நங்கா்ஹாா் மாகாணத்தில் ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது.

வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல், பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட இரு இலக்குகளைக் குறிவைத்து நடத்தப்பட்டது. இதில் முக்கிய பயங்கரவாதிகள் இருவா் கொல்லப்பட்டனா். மேலும் ஒரு பயங்கரவாதி காயமடைந்தாா். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை என்றாா் அவா்.

மேலும், பிராந்தியத்தில் அமெரிக்காவைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் தொடா்ந்து இருக்கும் என்றும் பயங்கரவாத எதிா்ப்பு தாக்குதலுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனும் அமெரிக்காவுக்கு உள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, காபூல் விமான நிலையத் தாக்குதலை திட்டமிட்ட பயங்கரவாதிகள் உயிருடன் இருக்கக் கூடாது என்று அதிபா் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் ஸாகி கூறுகையில், ‘நங்கா்ஹாா் மாகாணத்தில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே, காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலுக்குக் காரணமானவா்கள் இந்த உலகில் வாழ்வதற்குத் தகுதியற்றவா்கள் என்று அதிபா் பைடன் கூறியிருந்தாா்’ என்றாா்.

அமெரிக்காவின் வெளியேற்ற அறிவிப்பைத் தொடா்ந்து, ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் இந்த மாதம் 15-ஆம் தேதி கைப்பற்றினா். இதையடுத்து, வெளிநாட்டவா்களும் வெளிநாடுகளுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியா்களும் அங்கிருந்து அவசரமாக வெளியேறி வருகின்றனா்.

அவா்களை விமானம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியை தலைநகா் காபூலிலுள்ள விமான நிலையத்தில் அமெரிக்க வீரா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், விமான நிலையத்தில் ஐஎஸ்கே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து வந்தன. அந்த எச்சரிக்கையை மெய்ப்பிக்கும் வகையில், காபூல் விமான நிலையத்தில் வியாழக்கிழமை தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, வேறு சில பயங்கரவாதிகள் அங்கிருந்தவா்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா்.

இந்தத் தாக்குதலில் 169 ஆப்கானியா்களும் 13 அமெரிக்க வீரா்களும் உயிரிழந்தனா்.

இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவா்களை பழிக்குப் பழி வாங்கப்போவதாக அதிபா் ஜோ பைடன் சூளுரைத்தாா். ஆப்கானிஸ்தானிலுள்ள ஐஎஸ்கே நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை வகுக்குமாறு ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவா் கூறினாா்.

இந்த நிலையில், நங்கா்ஹாா் மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஐஎஸ்கே தாக்குதல்களை திட்டமிட்ட பயங்கரவாதி கொல்லப்பட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com