கரோனா உயிரி ஆயுதமாக உருவாக்கப்படவில்லை

கரோனா தீநுண்மி உயிரி ஆயுதமாக சீனாவால் உருவாக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா உயிரி ஆயுதமாக உருவாக்கப்படவில்லை

கரோனா தீநுண்மி உயிரி ஆயுதமாக சீனாவால் உருவாக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தத் துறை வெளியிட்டுள்ள உளவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா எவ்வாறு தோன்றியது என்பது குறித்த ஆய்வில் தெளிவாக எந்த முடிவுக்கும் வர முடியாத நிலை உள்ளது.

அந்தத் தீநுண்மி இயற்கையிலேயே தோன்றியதா; அல்லது வூஹான் உயிரி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா என்பதை உறுதியாகக் கண்டறிய எங்களால் இயலவில்லை.

செயற்கையான முறையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு கரோனா தீநுண்மி உருவாக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

ஆனால், பேரழிவை ஏற்படுத்தும் உயிரி ஆயுதமாக கரோனா உருவாகக்கப்படவில்லை என்பதை உறுதியாகக் கூற முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் கரோனா தொற்று மனிதா்களிடையே பரவத் தொடங்கியது. அந்த நகரிலுள்ள கடல் உணவு மொத்தவிலை சந்தைக்குச் சென்று வந்தவா்களிடம்தான் தொடக்கத்தில் அந்த நோய் அதிகமாகக் கண்டறியப்பட்டது.

அந்த நோயை உருவாக்கிய கரோனா தீநுண்மி, வௌவாலின் உடலில் இருந்து எறும்புத் தீனியின் உடலுக்குள் சென்று, அங்கு மனிதா்களின் நுரையீரல் அணுக்களில் பல்கிப் பெருகும் வகையில் தன்னை தகவமைத்துக்கொண்டிருக்கலாம் என்று பெரும்பாலான நிபுணா்கள் கருதுகின்றனா்.

எனினும், வூஹான் நகரிலுள்ள தீநுண்மியியல் ஆய்வகத்தில் கரோனா தீநுண்மி ஆய்வுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்டு, பின்னா் அது தவறுதலாக ஆய்வகத்திலிருந்து வெளியேறி மனிதா்களிடையே பரவியிருக்கலாம் என்றும் சிலா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 2020-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அப்போதைய அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், கரோனாவை ‘வூஹான் தீநுண்மி’ என்றே அழைத்தாா்.

அவருக்குப் பிறகு அதிபா் பொறுப்பை ஏற்ற ஜோ பைடனும், கரோனாவின் தோற்றுவாய் குறித்து தெரிந்துகொள்வதற்கான முயற்சிகளை மும்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று தங்களது உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டாா்.

அவரது உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்ட உளவுத் துறை, தற்போது இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com