ஒமைக்ரான் வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

உலகில் மூன்றாம் அலை எழுந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது புதிய வகை கரோனா வைரஸான ஒமைக்ரான். இது முதன் முதலில் கண்டறியப்பட்டது தென்னாப்ரிக்காவில்.
ஒமைக்ரான் வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
ஒமைக்ரான் வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

ஜோஹன்னஸ்பர்க்: உலகில் மூன்றாம் அலை எழுந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது புதிய வகை கரோனா வைரஸான ஒமைக்ரான். இது முதன் முதலில் கண்டறியப்பட்டது தென்னாப்ரிக்காவில்.

தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ், தற்போது ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 20 நாடுகளில் பரவிவிட்டது. இன்னமும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

இது முதன் முதலில் எப்படி கண்டறியப்பட்டது என்பது குறித்த சுவாரஸ்மான தகவல் கிடைத்துள்ளது.

நவம்பர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை... தென்னாப்ரிக்காவில் உள்ள மிகப்பெரிய தனியார் ஆய்வகத்தில் கரோனா வைரஸின் மரபணு வரிசைமுறைக்காக வந்த 8 கரோனா வைரஸ் மாதிரிகள் சோதனைக்குள்படுத்தப்பட்டிருந்தன. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ரக்வெல் வியனாவுக்கு அன்று ஒரு சாதாரண பணிநாளாக அமையவில்லை. மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

லான்ஸெட் ஆய்வகத்தில் கரோனா மாதிரிகள் சோதனைக்குள்படுத்தப்பட்டிருந்தன. அதில் எண்ணற்ற உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்கள் காணப்பட்டன. குறிப்பாக, மனித உடலுக்குள் ஊடுருவ உதவும் புரோட்டீன் கூர்முனைகளில் உருமாற்றமடைந்த அடைந்த வைரஸ்கள்.

ஆனால் ஒரு மாதிரியை பரிசோதித்தபோது, அதில் என் கண்களுக்குத் தெரிந்தவை, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மாதிரிகளின் பரிசோதனை செயல்முறைகளில் ஏதேனும் தவறு நடந்திருக்குமா என்றுதான் முதலில் எனக்குத் தோன்றியது. இந்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற உணர்வு ஏற்பட்டபோது, நான் மூழ்கிக் கொண்டிருப்பதைப் போல தோன்றியது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

உடனடியாக, ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள தேசிய தொற்றுநோயியல் துறையில் பணியாற்றும் எனது சக ஊழியர், மரபணு வரிசைமுறை நிபுணர் டேனியல் அமோகாவிடம் நான் தொலைபேசியில் அழைத்து இது பற்றி கூறினேன். 

அதை எப்படி சொல்வது என்று கூட எனக்கு அப்போது தெரியவில்லை என்கிறார் வியனா. அமோகாவிடம் நான், இது புதிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸாக இருக்கலாம் என்று தோன்றுவதாகக் கூறினேன்.

தென்னாப்ரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த புதிய வகை கரோனா வைரஸ்தான், உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்தது.

கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமைக்ரான்’ என பெயரிடப்பட்டது. ‘பி.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்டுள்ள இந்த வகைக் கரோனா,  மிக வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கரோனாக்களைவிட அதிக தீவிரமாக மனிதா்களிடையே பரவும் என்று அஞ்சப்படுகிறது. 

இதையடுத்து, உலக நாடுகள் பலவும் விமான மற்றும் பயணத்தடைகள், கட்டுப்பாடுகளை விதித்தன. இது தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் பரவுக் கூடும் என்பதால் ஒவ்வொரு நாடும், தங்கள் நாடுகளுக்குள் ஒமைக்ரான் வந்துவிடக் கூடாது என்று முயற்சிகளை எடுத்தன. ஆனால் டிசம்பர் 1ஆம் தேதி காலை நிலவரப்படி 20 நாடுகளில் ஒமைக்ரான் ஏற்கனவே பரவிவிட்டது.

உருமாறிய ஆல்பா வைரஸுடன் சில அம்சங்கள் ஒத்துப்போகின்றன. ஆனால், ஆகஸ்ட் மாதம் முதலே தென்னாப்ரிக்காவில் ஆல்ஃபா வகை வைரஸ் கண்டறியப்படவில்லை. 

புதிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட பிறகு நவம்பர் 23ஆம் தேதி ஜோஹன்னஸ்பர்க் மற்றும் பிரிட்டோரியா பகுதிகளிலிருந்து வந்த மேலும் 32 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. அதில் உறுதி செய்யப்பட்டன. அப்போது அது மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது என்கிறார் அமோகா.

அன்றைய தினமே தேசிய தொற்றுநோயியல் ஆய்வு மையம், சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்து, இதர ஆய்வகங்களிலும் சோதனையை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கிருந்தும் ஒத்த முடிவுகள் கிடைத்தன.

சர்வதேச அறிவியல் தகவலில் இந்த தகவலை என்ஐசிடி பதிவு செய்தது. அங்கு இதேப்போன்ற மரபணு வரிசைமுறை கண்டறியப்பட்ட தகவல் கிடைத்தது. உடனடியாக இந்த தகவல் உலக சுகாதார அமைப்புக்குக் கொண்டு செல்லப்பட்டது.

தற்போது அனைவருக்கும் எழும் கேள்விகள்.. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மற்றும் ஏற்கனவே கரோனா பாதித்தவர்களை புதிய வகை ஒமைக்ரான் பாதிக்குமா? அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிகமாக இருக்குமா? இது பல்வேறு வயதினரிடையே எவ்வாறு மாறுபடும்? என்பதுவே. விடைகளுக்காக காத்திருக்கிறோம்.

இது தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுவிட்டன. இன்னமும் 3 அல்லது 4 வாரங்களில், இந்த கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்துவிடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com