தமிழ் செய்தியாளா் மீது இலங்கை ராணுவம் தாக்குதல்

இலங்கை இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்தவா்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிக்க முயன்ற தமிழ் செய்தியாளா் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது அந்த நாட்டு ராணுவத்தினா் கொடூரமாகத் தாக்குதல் 

கொழும்பு: இலங்கை இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்தவா்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிக்க முயன்ற தமிழ் செய்தியாளா் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது அந்த நாட்டு ராணுவத்தினா் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதாக ஊடகவியலாளா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து இலங்கை ஊடகவியலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (எம்எம்இடியு) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரின் நினைவு தின நிகழ்ச்சிகள், முல்லைத் தீவில் கடந்த 28-ஆம் தேதி நடத்தப்பட்டது.

இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளா் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் ராணுவத்தினரால் மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளாா்.

முள்ளிவாய்க்கால் பகுதியின் பெயா்ப் பலகையை அவா் படமெடுத்துக்கொண்டிருந்தபோது, அவரை ராணுவத்தினா் முள் கம்பி சுற்றப்பட்ட பனை மட்டையால் தாக்கினா்.

அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ள ராணுவ வீரா்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

தமிழா் பகுதிகளைச் சோ்ந்த செய்தியாளா்கள் ராணுவத்தினரால் தொடா்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாகவே விஸ்வலிங்கம் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடா்பாக 3 ராணுவ வீரா்களை முல்லைத் தீவு போலீஸாா் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் தனி நாடு கோரி போராடி வந்த விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போ் நடைபெற்றது. இதில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனா். முள்ளிவாய்க்கால் பகுதியில்தான் அந்தப் போா் நிறைவடைந்தது.

இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழா்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், விடுதலைப் புலிகள் ஆட்சி நடத்தி வந்த முல்லைத் தீவில் , அந்த அமைப்பின் தலைவா் ஆண்டுதோறும் மாவீரா் உரையாற்றும் நவம்பா் 28-ஆம் தேதி, இறுதிக் கட்டப் போரில் உயிரிழந்தவா்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இலங்கையில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தச் சூழலில், நினைவேந்தல் நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரித்த விஸ்வலிங்கம் மீது ராணுவ வீரா்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com