38 நாடுகளுக்கு பரவிய ஒமைக்ரான்: அதிர்ச்சி தகவலை பகிர்ந்த உலக சுகாதார அமைப்பு

ஒமைக்ரான் எந்தளவுக்கு பரவல் தன்மை கொண்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க இன்னும் இரண்டு வாரங்களாகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒமைக்ரான் கரோனா 38 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், இதன் காரணமாக எந்த உயிரிழப்பும் நிகழவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டு வரும் உலக பொருளாதாரத்தில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் கொள்ளப்படுகிறது.

இதனிடையே, அதிக மாறுதல்களை கொண்ட புதிய உருமாறிய கரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. ஒமைக்ரான் வேகமாக பரவிவரும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் ஒமைக்ரான் கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் எந்தளவுக்கு பரவல் தன்மை கொண்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க இன்னும் இரண்டு வாரங்களாகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேபோல், தீவிர உடல் நல பாதிப்பை அது ஏற்படுத்துகிறதா, அதற்கான சிகிச்சை எந்தளவுக்கு பயன் தருகிறது, தடுப்பூசி எந்தளவுக்கு செயல்படுகிறது என்பதை தெரந்த கொள்ளவும் இரண்டு வாரங்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசர பிரிவு இயக்குநர் மைக்கேல் ரியான் கூறுகையில், "அனைவருக்கும் தேவையான பதில்களை நாங்கள் பெறப் போகிறோம். ஒமைக்ரான் தொடர்பான இறப்புகள் இன்னும் பதிவாகவில்லை.

ஆனால், புதிய வகை கரோனா பரவலானது அடுத்த சில மாதங்களில் ஐரோப்பாவில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கரோனா பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்" என்றார்.

உலக பொருளாதாரம் மீண்டுவந்த சமயத்தில், டெல்டா கரோனா எந்தளவுக்கு அதை மந்தமாக்கியதோ அதேபோல், புதிய உருமாறிய கரோனா மந்தமாக்கும் என சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறுகையில், "இந்த புதிய உருமாறிய கரோனா கண்டறிவதற்கு முன்பே, மீண்டு வரும் உலக பொருளாதாரம் குறித்து கவலை தெரிவித்தோம். ஏனெனில், பொருளாதாரம் மீண்டு வருகையில், அந்த சற்று குறைந்தது. தற்போது, மிக வேகமாக பரவக்கூடிய ஒரு புதிய கரோனா எங்களின் நம்பிக்கையை குலைக்கலாம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com