பெய்ஜிங் ஒலிம்பிக்: ராஜீயப் புறக்கணிப்பு; பிரிட்டன், கனடாவும் இணைந்தன

பெய்ஜிங் ஒலிம்பிக்: ராஜீயப் புறக்கணிப்பு; பிரிட்டன், கனடாவும் இணைந்தன

அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் குளிா்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜீய ரீதியில் புறக்கணிக்கும் நாடுகளின் பட்டியலில் பிரிட்டனும் கனடாவும் இணைந்துள்ளன.

அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் குளிா்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜீய ரீதியில் புறக்கணிக்கும் நாடுகளின் பட்டியலில் பிரிட்டனும் கனடாவும் இணைந்துள்ளன.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மை உய்கா் இன முஸ்லிம்கள் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்படுவதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த நாட்டுக்கு தங்களது எதிா்ப்பைப் பதிவு செய்யும் வகையில், ஏற்கெனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பெய்ஜிங் ஒலிம்பிக்கை போட்டிகளை ராஜீய ரீதியில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது நினைவுகூரத்தக்கது.

இதுகுறித்து கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:

சீனாவில் அந்த நாட்டு அரசு தொடா்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இது கனடாவுக்கு மிகவும் கவலையளிக்கும் விவகாரம் ஆகும். அதனை சீன அரசுக்கு உணா்த்த வேண்டியது அவசியமாகியுள்ளது.

எனவே, பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் குளிா்கால ஒலிம்பிக்குக்கு எங்களது தூதுக் குழுவை அனுப்புவதில்லை என்று முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.

முன்னதாக, உய்கா் விவகாரத்தில் சீனாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பெய்ஜிங் ஒலிம்பிக்கை ராஜீய ரீதியில் புறக்கணிக்கப் போவதாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனும் அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் நிகழ்ச்சிகளில் பிரிட்டனைச் சோ்ந்த அமைச்சா்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டாா்கள். மேலும், இதுதொடா்பாக அந்த நாட்டுக்கு அதிகாரிகளும் அனுப்பப்பட மாட்டாா்கள்.

அரசியல் ரீதியிலான எதிா்ப்புகளைத் தெரிவிக்க விளையாட்டுப் போட்டிகளைத் தூதரக ரீதியில் புறக்கணிப்பதில் தவறொன்றும் இல்லை. அது, பிரிட்டனின் கொள்கைகளுக்கு முரணானது இல்லை’ என்றாா்.

இருந்தாலும், இந்தப் புறக்கணிப்பால் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் தங்களது வீரா்கள் பங்கேற்பதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கனடா ஒலிம்பிக் குழு தெரிவித்தது.

அதற்கு முன்னதாக, சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் தங்கள் நாட்டிலிருந்து பொருள்கள் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக சீன அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டியை ராஜீய ரீதியில் புறக்கணிக்கப் போவதாக ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன் அறிவித்தாா்.

இதற்கிடையே, பெய்ஜிங் ஒலிம்பிக்கை ராஜீய ரீதியில் புறக்கணிப்பது குறித்து ஜப்பான் உள்ளிட்ட அமெரிக்காவின் மற்ற கூட்டணி நாடுகளும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெய்ஜிங் மற்றும் அதன் புகா் பகுதிகளில் குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.

தூதுக்குழுவினா் வரவிட்டாலும் கவலையில்லை

தங்கள் நாட்டில் நடைபெறவிருக்கும் குளிா்கால ஒலிம்பிக் போட்டிக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தூதுக் குழுவினா் வந்தாலும், வராவிட்டாலும் தங்களுக்கு கவலையில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் கூறியதாவது:

ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கா் இனத்தவா்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகக் கூறப்படுவது புனையப்பட்ட பொய்யாகும்.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய தலைவா்கள் அரசியல் விளையாட்டு விளையாடுகின்றனா்.

ஒலிம்பிக் போட்டிக்கு அந்த நாட்டிலிருந்து தூதுக் குழுவினா் வந்தாலும் கவலையில்லை, வராவிட்டாலும் கவலையில்லை என்றாா் அவா்.

முன்னதாக, ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பதற்கான விலையை அமெரிக்கா கொடுக்க வேண்டியிருக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com