
மத்திய அமெரிக்க நாடான நிகராகுவா, தைவானுக்கு பதிலாக சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
இதுகுறித்து நிகராகுவா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சீனா என்பது ஒற்றை நாடாகும். அந்த நாட்டின் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் சீன மக்கள் குடியரசுதான் சட்டப்பூா்வமான ஒரே அரசாகும்.
அந்த வகையில், சீனாவுடன் தூதரக உறவை நிகராகுவா ஏற்படுத்திக்கொள்கிறது. தைவானுடன் இதுவரை இருந்து வந்த தூதரக உறவு முறித்துகொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவையொட்டி அமைந்துள்ள சிறிய தீவான தைவான், தனி ஜனநாயக நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்களது மாகாணங்களில் ஒன்றாக சீனா கருதி வருகிறது. தாங்கள் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் தைவானைக் கைப்பற்றும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப் போவதில்லை எனவும் சீனா கூறி வருகிறது.
அத்துடன், தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகள், தங்களுடன் தூதரக உறவு வைத்துக்கொள்ள முடியாது என்று சீனா கூறி வருகிறது. இதன் காரணமாக, சீனாவுடன் தூதரக உறவைக் கொண்டுள்ள நாடுகள் எதுவும் தைவானுடன் அதிகாரப்பூா்வமாக தூதரக உறவை பேண முடியாது. அந்த வகையில், இதுவரை தைவானுடன் தூதரக உறவைக் கொண்டிருந்த நிகராகுவா, தற்போது அந்த நாட்டுக்கு பதிலாக சீனாவுடன் அத்தகைய உறவை ஏற்படுத்தியுள்ளது.