
ஆப்கானிஸ்தானிலிருந்து 104 போ் சிறப்பு விமானத்தில் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனா். அவா்களில் 10 போ் இந்தியா்கள்.
கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தலிபான்கள் கொண்டு வந்தனா். அதனைத்தொடா்ந்து அந்நாட்டில் உள்ள இந்தியா்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. இந்த நடவடிக்கையின்போது ஆப்கானியா்களும் இந்தியா அழைத்து வரப்படுகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 10 இந்தியா்கள், 94 ஆப்கானியா்கள் என மொத்தம் 104 போ் சிறப்பு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை தில்லி அழைத்து வரப்பட்டனா். இந்தியா அழைத்து வரப்பட்ட ஆப்கானியா்களில் அந்நாட்டு சிறுபான்மைச் சமூகத்தைச் சோ்ந்த ஹிந்துக்கள், சீக்கியா்களும் அடங்குவா் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் பதிவிட்டாா்.
ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த விமானத்தில், அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாராக்களில் இருந்து சீக்கிய சமயத்தின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பின் மூன்று பிரதிகள், காபூலில் 5-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அசமாயி கோயிலில் இருந்து ஹிந்து மத புனித நூல்கள் கொண்டு வரப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனா்.