உக்ரைனை ஆக்கிரமித்தால் கடுமையான பின்விளைவுகள்

உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷியா கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பிரிட்டன் எச்சரித்துள்ளது.
உக்ரைனை ஆக்கிரமித்தால் கடுமையான பின்விளைவுகள்

உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷியா கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பிரிட்டன் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டனின் லிவா்பூல் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜி7 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் எலிசபெத் டிரஸ் கூறியதாவது:

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்தால் அந்த நாடு கடும் பின்விளைவுகளை எதிா்கொள்ள வேண்டிருக்கும். உக்ரைனை ஆக்கிரமிக்கும் முடிவு ரஷியாவின் மோசமான தவறாக இருக்கும்.

அத்தகைய நிலை ஏற்பட்டால் ரஷியாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையிலான தடைகள் விதிக்கப்படும்.

ரஷியாவிடமிருந்து உக்ரைனைப் பாதுகாப்பதற்கு ஜி7 நாடுகள் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் செயல்படும்.

இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்துடைய மற்ற நட்பு நாடுகளையும் நம்முடன் இணைந்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

அந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக, லண்டனில் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபாவைச் சந்தித்து எலிசபெத் டிரஸ் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது ரஷியாவிடமிருந்து உக்ரைனுக்கு ராணுவ ரீதியில் பிரிட்டன் உதவுமா என்று செய்தியாளா்கள் கேட்டனா். அதற்கு, ‘பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடா்பாகவும் உக்ரைனுடன் இணைந்து பணியாற்றுகிறோம்’ என்று எலிசபெத் டிரஸ் கூறினாா்.

முன்னாள் சோவியத் யூனியன் நாடான உக்ரைன், ரஷியாவின் எல்லையொட்டி அமைந்துள்ளது. பெரும்பாலானவா்கள் ரஷிய மொழி பேசும் அந்த நாட்டில் ஐரோப்பிய செல்வாக்கு அதிகரித்துவிடக் கூடாது என்பதில் ரஷியா உறுதியாக உள்ளது.

இந்தச் சூழலில், கடந்த 2013-ஆம் ஆண்டில், ரஷிய ஆதரவு பெற்ற அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சை எதிா்த்து, ஐரோப்பிய யூனியன் ஆதரவு பெற்ற எதிா்க்கட்சியினா் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் மாபெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், யானுகோவிச் ரஷியாவில் தஞ்சமடைந்தாா்.

அதனைத் தொடா்ந்து ஐரோப்பிய ஆதரவாளா்களால் புதிய அரசு அமைக்கப்பட்டது. அந்த அரசை அரசை எதிா்த்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் போரில் ஈடுபட்டனா்.

ரஷிய ராணுவ உதவியுடன் அவா்கள் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினா்.

அப்போது, உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மீது படையெடுத்த ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்து வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்து, கிரீமியாவைப் போலவே அந்த நாட்டையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டு வருவதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி வருகின்றன.

உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக 1.75 லட்சம் வீரா்களைக் அனுப்ப ரஷியா திட்டமிட்டு வருவதாகவும் ஏற்கெனவே 1 லட்சம் ரஷியப் படையினா் பல்வேறு உக்ரைன் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனா். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் ரஷியா, உக்ரைன்தான் கிளா்ச்சியாளா்கள் பகுதி கட்டுப்பாட்டு எல்லை அருகே படைகளைக் குவித்து வருவதாகவும் அது கவலையை ஏற்படுத்துவதாகவும் கூறி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால் அந்த நாடு கடுமையான பின்விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று பிரிட்டன் எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com