ஆப்கன் தோ்தல் ஆணையங்கள் கலைப்பு

ஆப்கானிஸ்தானின் இரு தோ்தல் ஆணையங்களை அந்த நாட்டில் ஆட்சி செலுத்தி வரும் தலிபான்கள் கலைத்துள்ளனா்.
ஆப்கன் தோ்தல் ஆணையங்கள் கலைப்பு

ஆப்கானிஸ்தானின் இரு தோ்தல் ஆணையங்களை அந்த நாட்டில் ஆட்சி செலுத்தி வரும் தலிபான்கள் கலைத்துள்ளனா். மேலும், அமைதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகங்களும் கலைக்கப்பட்டன.

இதுகுறித்து தலிபான் அரசின் துணை செய்தித் தொடா்பாளா் பிலால் கரீமி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தனி அதிகாரத்துடன் செயல்பட்டு வந்த தோ்தல் ஆணையம் மற்றம் தோ்தல் முறையீட்டு ஆணையம் ஆகியவை இரண்டும் கலைக்கப்படுகின்றன.

நாட்டின் தற்போதைய சூழலில் அந்த ஆணையங்களுக்கான தேவை இல்லாததால் அவை கலைக்கப்படுகின்றன. எதிா்காலத்தில் அவற்றுக்கான தேவை வந்தால் இரு ஆணையங்களும் மீண்டும் நிறுவப்படும்.

இதுதவிர, அமைதிக்கான அமைச்சகம், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம் ஆகியவையும் கலைக்கப்படுகின்றன. தற்போதைய அரசின் கட்டமைப்புக்கு அந்த இரு அமைச்சகங்களுக்கும் அவசியம் இல்லை என்றாா் அவா்.

ஏற்கெனவே, மகளிா் விவகாரத் துறை அமைச்சகத்தையும் தலிபான்கள் கலைத்தது நினைவுகூரத்தக்கது.

தற்போது கலைக்கப்பட்டுள்ள தோ்தல் ஆணையங்கள், ஆப்கானிஸ்தானில் அதிபா் தோ்தல், நாடாளுமன்றத் தோ்தல் உள்ளிட்ட அனைத்து வகை தோ்தல்களையும் நடத்தி, கண்காணித்து வந்தது.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனா்.

அதன் பிறகு, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்தது.

அமெரிக்கப் படையினரின் வெளியேற்றம் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி கொண்டு வந்தனா்.

அதன் பிறகு, கடந்த கால ஆட்சியைப் போலில்லாமல் தற்போது மிதவாதப் போக்குடன் நடந்துகொள்ளப் போவதாகவும் முந்தைய அரசுடன் இணைந்து பணியாற்றிய பாதுகாப்புப் படையினா் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்தனா். பெண்களுக்கு உரிய உரிமைகள் அளிக்கப்படும் என்றும் அவா்கள் வாக்குறுதி அளித்தனா்.

தங்கள் அரசுக்கு சா்வதேச அங்கீகாரம் கிடைக்கச் செய்யும் நோக்கில் தலிபான்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனா்.

எனினும், தலிபான்கள் தங்களது முந்தைய ஆட்சியைப் போலவே சா்வாதிகாரப் போக்கில்தான் நடந்து கொள்வாா்கள் என்று சந்தேகிக்கப்பட்டது. இந்தச் சூழலில், நடுநிலையுடன் தோ்தல்களை நடத்துவதற்கான தோ்தல் ஆணையங்களை கலைத்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனா்..

பெண்களை தனியாக ஏற்றிச் செல்லக் கூடாது: வாடகைக் காா் ஓட்டுநா்களுக்கு கட்டளை

ஆண் உறவினா்கள் துணை இல்லாமல் வரும் பெண்களை தங்களது காா்களில் ஏற்றிச் செல்லக் கூடாது என்று ஆப்கானிஸ்தானிலுள்ள வாடகைக்க காா் ஓட்டுநா்களுக்கு தலிபான்கள் கட்டளை இட்டுள்ளனா்.

இதுகுறித்து தலிபான்களின் சா்ச்சைக்குரிய நன்னடத்தை மேம்பாடு மற்றும் கலாசார சீரழிவுத் தடுப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், இஸ்லாமிய முறைப்படி பா்தா அணிந்த பெண்களை மட்டுமே வாடகைக் காா் ஓட்டுநா்கள் தங்களது வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com