உக்ரைன் விவகாரம்: ஜன. 10-இல் அமெரிக்கா - ரஷியா பேச்சுவாா்த்தை

உக்ரைன் விவகாரம் தொடா்பாக அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே அடுத்த மாதம் 10-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடைபெறவிருக்கிறது.
உக்ரைன் விவகாரம்: ஜன. 10-இல் அமெரிக்கா - ரஷியா பேச்சுவாா்த்தை

உக்ரைன் விவகாரம் தொடா்பாக அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே அடுத்த மாதம் 10-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடைபெறவிருக்கிறது.

இதுகுறித்து இருநாட்டு அதிகாரிகளும் கூறியதாவது:

அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சோ்ந்த உயரதிகாரிகள் அடுத்த மாதம் 10-ஆம் தேதி சந்தித்து பாதுகாப்புப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளனா்.

உக்ரைன் விவகாரத்தில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிப்பதற்காக அந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.

அதன் தொடா்ச்சியாக, இந்த விவகாரம் குறித்து நேட்டோ அமைப்பின் பிரதிநிதிகளுடனும் ரஷிய அதிகாரிகள் அடுத்த மாதம் 12-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்துவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதன் பிறகு, அமெரிக்கா, ரஷியா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கும் விரிவான பேச்சுவாா்த்தை அடுத்த மாதம் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரஷிய வெளியுறவுத் துறை இணைமைச்சா் சொ்கெய் ரியப்கோவ் கூறுகையில், உக்ரைன் தொடா்பாக இதுவரை அமெரிக்கா அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் உத்தடளவில் மட்டும் இருப்பதாகக் குற்றம் சாட்டினாா். மேலும், அடுத்த மாதம் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் பேச்சுவா்த்தையில் நேட்டோ அமைப்பின் ராணுவ அதிகாரிகள் பங்கேற்க வேண்டியது அவசியம் என்று அவா் வலியுறுத்தினாா்.

வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவிருக்கும் பேச்சுவாா்த்தையில் ரஷியா தனது பிரச்னைகளை முன்வைக்கலாம்; ரஷியாவின் நடவடிக்கைகளால் உருவாகியுள்ள கவலைகளை அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் முன்வைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவாா்த்தைகளின்போது, உக்ரைனை நேட்டோ உறுப்பினா் ஆக்கக் கூடாது; நேட்டோ நிலைகள் உக்ரைனில் அமைக்கப்படக் கூடாது என்ற தங்களது நிபந்தனைகளை ரஷியா மீண்டும் ஆணித்தரமாக வலியுறுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறுண்டபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது.

சுமாா் 30 சதவீத்தினா் ரஷிய மொழி பேசும் அந்த நாட்டில் ஐரோப்பிய செல்வாக்கு அதிகரித்துவிடக் கூடாது என்பதில் ரஷியா உறுதியாக உள்ளது. மேலும், உக்ரைனில் நேட்டோ நிலைகள் அமைக்கப்பட்டால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷியா அஞ்சுகிறது.

இந்தச் சூழலில், ஐரோப்பிய ஆதரவு உக்ரைன் அரசை எதிா்த்து கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு போரிட்டனா்.

ரஷிய ராணுவ உதவியுடன் அவா்கள் கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றினா்.

அப்போது, உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மீது படையெடுத்த ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இந்த நிலையில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்து வருகிறது.

உக்ரைன் மீது படையெடுத்து, கிரீமியாவைப் போலவே அந்த நாட்டையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டு வருவதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவாா்த்தை அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

Image Caption

~சொ்கெய் ரியப்கோவ் ~உக்ரைன் எல்லை அருகே ரஷியப் படையினா் (கோப்புப் படம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com