சுகாதார கட்டமைப்பை தகர்க்கும் 'கரோனா சுனாமி'...எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

"இது ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கும் சுகாதார கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யக்கூடும்"
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த ஒரு வாரத்தில், ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்துவருகிறது. அதிக பரவல் தன்மை கொண்ட ஒமைக்ரான், அமெரிக்கா, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளில் உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, ஏழே நாள்களில், 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 2020ஆம் ஆண்டு, மார்ச் மாதம், கரோனா பரவ தொடங்கிய காலத்திலிருந்து, கரோனா பரவல் இந்தளவுக்கு உச்சத்தை தொட்டதில்லை. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், "டெல்டா மற்றும் ஒமைக்ரான் உருமாறிய கரோனா வகைகள் இணைந்து இரட்டை அச்சுறுத்தல்களாக மாறியுள்ளது. 

இது புதிதாக பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கையைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 

குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் வைரஸ் பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஒமைக்ரான் மின்னல் வேகத்தில் பரவக்கூடியது. டெல்டா கரோனாவே இன்னும் முழுமையாகக் கட்டுப்படாத நிலையில், இப்போது ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கரோனா பாதிப்பில் சுனாமியை ஏற்படுத்துகிறது. 

இது ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கும் சுகாதார கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யக்கூடும். ஏற்கனவே அதிகப்படியான சுகாதார ஊழியர்கள் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு கரோனா பாதிப்புக்கு எதிராக உலக நாடுகள் பெரும் போராட்டம் நடத்தின. 

அடுத்த ஆண்டு வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வரத் தொடங்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும். தடுப்பூசி சமத்துவத்தில் தான் வைரஸ் எவ்வளவு சீக்கிரம் ஒழிக்கப்படும் என்பது அடங்கியுள்ளது. உலகில் உள்ள அனைத்து நாட்டிலும் உள்ள மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாகத் தடுப்பூசி போட வேண்டும்.

அடுத்தாண்டு மத்தியில் இது 70 சதவீதமாக உயர வேண்டும். 194 நாடுகளில் 92 நாடுகள் இந்த 40 சதவீத இலக்கை கூட அடைய முடியாது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்குக் குறைந்த அளவு தடுப்பூசி மட்டுமே கிடைக்கிறது. அப்படிக் கிடைக்கும் தடுப்பூசி கூட காலாவதியாகும் தேதிக்கு அருகில் உள்ளது. 

மேலும், சிரிஞ்ச்கள் போன்ற முக்கிய பாகங்கள் இல்லாமல் தடுப்பூசி வருகிறது. இது உலக நாடுகளுக்கு ஓர் அவமானம் மட்டுமல்ல, இது உயிர்களைப் பறிக்கிறது. கரோனா வைரஸ் தடையின்றி பரவி, தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. 

அடுத்த ஆண்டிலாவது தடுப்பூசி சமத்துவம் இருக்க வேண்டும் என்பதை உலக நாட்டுத் தலைவர்களுக்கு நான் வலியுறுத்துகிறேன். 2022இன் மத்திக்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தது 70 சதவிகித பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை நாம் புத்தாண்டு உறுதிமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com