ஒமைக்ரான் கரோனா சுனாமியால் நொடிக்கு இருவர் பாதிப்பு...அச்சத்தில் பிரான்ஸ்

"பிரான்ஸ் நாட்டின் மருத்துவமனைகளில் இப்போது இருக்கும் நிலைமையைப் பார்த்தால் அச்சமாக உள்ளது. டெல்டா கரோனா இங்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது"
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த ஒரு வாரத்தில், ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்துவருகிறது. அதிக பரவல் தன்மை கொண்ட ஒமைக்ரான், அமெரிக்கா, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளில் உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, ஏழே நாள்களில், 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவுவதற்கு முன்னதாகவே கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஒமைக்ரான் பரவலுக்கு பின்னர், நிலைமை மோசமாகிவிட்டது. பிரான்ஸ் நாட்டில் கடந்த புதன்கிழமை மட்டும் 2.08 லட்சம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

பிரான்ஸில் க ரோனா வைரஸ் சுனாமி போலப் பரவி வருவதாக பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கரோனா பாதிப்பு இந்தளவுக்கு மின்னல் வேகத்தில் பரவி இதுவரை நாங்கள் கண்டதில்லை. 

இதைப் பார்க்கும் போது தலையே சுற்றுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் பிரான்ஸ் தினசரி கரோனா பாதிப்பு 2.50 லட்சமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை சமயத்தில் பொதுமக்கள் எந்த காட்டுப்பாடும் இல்லாமல் வெளியே சுற்றுவது வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் மருத்துவமனைகளில் இப்போது இருக்கும் நிலைமையைப் பார்த்தால் அச்சமாக உள்ளது. டெல்டா கரோனா இங்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பலருக்குத் தீவிர பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒமைக்ரான் பாதிப்பு வரும் காலத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 

அதை எதிர்கொள்ள நாம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிரான்ஸில் தற்போது கரோனா சுனாமி ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.  இப்போது நமக்கு ஒமைக்ரான் மற்றும் டெல்டா என இரண்டு எதிரிகள் உள்ளன. இவை இரண்டும் ஒன்றிணைந்து ஒரு மிகப் பெரிய கரோனா அலையை ஏற்படுத்துகிறது. 

பிரான்ஸ் நாட்டில் இப்போது ஒவ்வொரு நொடிக்கும் 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

பிரான்ஸ் நாட்டில் வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், மீண்டும் ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே அந்நாட்டின் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com