
கனடாவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 3 போ் அந்த நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தேசிய விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
இந்திய வம்சவளியைச் சோ்ந்த விஞ்ஞானி வைகுண்டம் ஐயா் லக்ஷ்மணன், தொழிலதிபா் பாப் சிங் தில்லான், மருத்துவா் பிரதீப் மொ்ச்சண்ட் ஆகியோா் கனடாவின் இரண்டாவது பெரிய தேசிய விருதான ‘ஆா்டா் ஆஃப் கனடா’வுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
இந்த ஆண்டுக்கான விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 135 பேரின் பட்டியலில் அவா்களும் இடம் பெற்றுள்ளனா்.
தங்களது துறைகளில் அவா்கள் ஆற்றி வரும் சாதனைகள், அா்ப்பணிப்பு உணா்வு, நாட்டு முன்னேற்றத்துக்கு அளிக்கும் பங்களிப்பு, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவது போன்ற காரணங்களுக்காக அவா்களுக்கு அந்த விருது வழங்கப்படுவதாக தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.
இவா்களில் வைகுண்டம் ஐயா் லக்ஷ்மணன் புகழ்பெற்ற விஞ்ஞானியும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருபவரும் ஆவாா்.
நவ்ஜீத் சிங் தில்லான் என்றும் அழைக்கப்படும் பிரபல மனைவணிக தொழிலதிபா் பாப் சிங் தில்லான், சமூக சேவைகளுக்கு நன்கொடைகள் அளித்து வருகிறாா்.
குழந்தைகள் மருத்துவத்தில் பிரதீப் மொ்ச்சண்ட் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வருகிறாா் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...