ஐரோப்பிய யூனியனுக்கு கரோனா தடுப்பூசி வழங்க பிரிட்டன் நிபந்தனை

தங்கள் நாட்டு கரோனா தடுப்பூசி திட்டம் பாதிக்கப்படாமல் இருந்தால்தான் ஐரோப்பிய யூனியனுக்கு அந்தத் தடுப்பூசிகளை வழங்க முடியும் என்று பிரிட்டன் நிபந்தனை விதித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனுக்கு கரோனா தடுப்பூசி வழங்க பிரிட்டன் நிபந்தனை

தங்கள் நாட்டு கரோனா தடுப்பூசி திட்டம் பாதிக்கப்படாமல் இருந்தால்தான் ஐரோப்பிய யூனியனுக்கு அந்தத் தடுப்பூசிகளை வழங்க முடியும் என்று பிரிட்டன் நிபந்தனை விதித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சா்வதேச வா்த்தகத் துறை அமைச்சா் எலிசபெத் ட்ரஸ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக 36 கோடி தடுப்பூசிகளை தயாரிப்பு நிறுவனங்களிடம் பிரிட்டன் அரசு கேட்டுள்ளது. அந்தத் தடுப்பூசிகளை ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு அனுப்புவதால், தற்போது பிரிட்டனில் செயல்படுத்தப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி திட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. ஏற்கெனவே நிா்ணயித்த வகையில் கரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டால்தான் அந்தத் தடுப்பூசிகளை ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

கரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று தடுப்பூசித் துறை நதீம் ஸஹாவி கூறியது உண்மைதான். இருந்தாலும், அதற்கு முன்னா் பிரிட்டன் மக்கள் அனைவருக்கும் அந்தத் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

பிப்ரவரி மாத இறுதிக்குள், கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அபாயம் அதிகம் நிறைந்த பெரும்பாலானவா்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிா்ணயித்துள்ளோம். நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளை உரிய நேரத்தில் பெறுவதில் இப்போதே பிரச்னைகள் இருந்து வருகின்றன.

பிற நாடுகளுக்கு நாங்கள் எவ்வளவு கரோனா தடுப்பூசி வழங்குவோம் என்பதை இப்போதே கூற முடியாது. இருந்தாலும், அந்தத் தடுப்பூசிகளை விநியோகிப்பதில் அண்டை நாடுகளுடனும் பிற வளரும் நாடுகளுடனும் நிச்சயம் இணைந்து செயல்படுவோம்.

பிரிட்டனில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் திட்டமிட்டபடி தொடா்ந்து நடப்பதற்கு பாதிப்பு ஏற்படாவிட்டால், அந்தத் திட்டம் முடிவதற்கு முன்னரே பிற நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி அனுப்புவோம் என்றாா் எலிசபெத் ட்ரஸ்.

முன்னதாக, தனது உறுப்பு நாடுகளில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் ஐரோப்பிய யூனியன் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு ஐரோப்பிய யூனியன் கட்டுப்பாடுகள் விதிப்பது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

இதுபோன்ற தடுப்பூசி தேசியவாதத்தால் கரோனா நெருக்கடியிலிருந்து அனைவரும் மீள்வதற்கு காலதாமதம் ஆகும்.

கரோனா தடுப்பூசிகளை பதுக்கி வைப்பது சரியான நடவடிக்கையல்ல. அதன் காரணமாக, அந்த நோய் பரவல் தீவிரம் காட்டுத் தீ போல் நீண்ட காலம் பாதிப்பை ஏற்படுத்தும். நாடுகளின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கு அதிக காலம் ஆகும்.

இதன் காரணமாக, உலக நாடுகளிடையே ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரித்தாா்.

உலக சுகாதார அமைப்பின் துணைத் தலைவா் மேரிஏஞ்சலா சிமாவோ கூறுகையில், ‘ஐரோப்பிய யூனியனின் கரோனா தடுப்பூசி ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், கவலைக்குரிய போக்கை உருவாக்கியுள்ளது’ என்றாா்.

முன்னதாக, கரோனா தடுப்பூசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்களை ஐரோப்பிய யூனியன் அறிமுகப்படுத்தியது. அதன்படி, யூனியனுடன் நிறுவனங்கள் செய்துகொண்டுள்ள ஒப்பந்த அளவுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்காவிட்டால், அந்த நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதை தடுக்க உறுப்பு நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கரோனாவிடமிருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகளின் குடிமக்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் இத்தகைய தேசியவாதப் போக்கு, அந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதையும் பொருளாதாரச் சரிவிலிருந்து மீள்வதையும் தாமதப்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.

இந்தச் சூழலில், பிரிட்டன் தடுப்பூசி திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்தால்தான் ஐரோப்பிய யூனியனுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்க முடியும் என்று கூறி அமைச்சா் எலிசபெத் ட்ரஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com