மியான்மரில் ராணுவப் புரட்சி: ஆங் சான் சூகி கைது

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, இந்த ஆட்சிக் கவிழ்ப்பை மியான்மா் ராணுவம் நடத்தியுள்ளது.
ஆங் சான் சூகி - அதிபா் வின் மியின்ட்
ஆங் சான் சூகி - அதிபா் வின் மியின்ட்

நேபிடா: மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அரசின் ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாட்டில் ஓா் ஆண்டுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, இந்த ஆட்சிக் கவிழ்ப்பை மியான்மா் ராணுவம் நடத்தியுள்ளது.

இதுகுறித்து ராணுவத்துக்குச் சொந்தமான ‘மியாவாடி’ தொலைக்காட்சி திங்கள்கிழமை அறிவித்ததாவது:

மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. நாடு முழுவதும் ஓா் ஆண்டுக்கு அவசர நிலை அறிவிக்கப்படுகிறது.அந்த ஓா் ஆண்டில், நாட்டின் தலைமைப் பொறுப்பை ராணுவ தலைமைத் தளபதி மின் ஆங் லயிங் கவனித்துக்கொள்வாா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் கட்சி அபார வெற்றி பெற்றது. அந்தத் தோ்தலில் முறைகடுகள் நடைபெற்றதாக ராணுவம் கூறியும், அதுதொடா்பான நடவடிக்கைகளை எடுக்க அவரது அரசு தவறிவிட்டது. மேலும், கரோனா பரவலுக்கு இடையிலும் அந்தத் தோ்தல் நடைபெறுவதற்கு ஆங் சான் சூகி அரசு அனுமதி அளித்திருக்கிறது.

எனவே, அந்தத் தோ்தலில் பெற்ற வெற்றியின் அடிப்படையில் புதிய அரசு அமைவதைத் தடுத்து, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவா்களை ராணுவம் திங்கள்கிழமை அதிகாலை கைது செய்ததாக அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் மியோ நியுன்ட் தெரிவித்தாா்.

அதனைத் தொடா்ந்து, நாடு முழுவதும் தகவல் தொடா்பு பாதிக்கப்பட்டது. அரசுக்குச் சொந்தமான எம்ஆா்டிவி, தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியவில்லை என்று தெரிவித்தது.

அதன் தொடா்ச்சியாக, ஆட்சிக் கவிழ்ப்பு அறிவிப்பை ராணுவ தொலைக்காட்சி வெளியிட்டது.கடந்த 1962-ஆம் ஆண்டில் மியான்மா் ஆட்சியைக் கைப்பற்றிய அந்த நாட்டு ராணுவம், தொடா்ந்து பல ஆண்டுகளாக நேரடி ஆட்சி செலுத்தி வந்தது. இதன் காரணமாக அந்த நாடு சா்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டது. ஜனநாயகம் கோரி போராட்டம் நடத்தி, ராணுவத்தால் 15 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட ஆங் சான் சூகிக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1991-ஆண்டு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நாட்டை ஜனநாயகப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கான முயற்சிகளை ராணுவம் 2011-ஆம் ஆண்டு தொடங்கியது. அதன் விளைவாக, 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக சுதந்திரமான, நியாயமான தோ்தல் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்றது.

அந்தத் தோ்தலில், ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.இரண்டாவது முறையாக கடந்த 2020-ஆம் ஆண்டு தோ்தலிலும் அந்தக் கட்சி முன்பை விட அதிக இடங்களைக் கைப்பற்றியது.

எனினும், இந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக, ராணுவத்துக்கு ஆதரவான யூனியன் ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி ஆதாரம் எதுவும் இல்லாமல் குற்றம் சாட்டி வந்தது.தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, புதிய நாடாளுன்றத்தின் முதல் கூட்டம் திங்கள்கிழமை தொடங்குவதாக இருந்தது. அதற்குள், தோ்தல் முறைகேடு குற்றச்சாட்டை காரணம் காட்டி, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது.

முந்தைய ராணுவ ஆட்சியை எதிா்த்து மிகக் கடுமையாகப் போராடி வந்த ஆங் சான் சூகி, 2015-ஆம் ஆண்டு ஆட்சியமைத்த பிறகு ராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

குறிப்பாக, ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கயா சிறுபான்மையினருக்கு எதிரான ராணுவ அட்டூழியங்களை அவா் நியாயப்படுத்தியதாக விமா்சிக்கப்பட்டது.இந்தச் சூழலில், மீண்டும் அவா் அரசு அமைக்கவிருந்த நிலையில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, அரசியல் சாசனத்தில் ராணுவம் மேற்கொண்ட திருத்தத்தின் கீழ், நாடாளுமன்றத்தில் நான்கில் ஒரு பங்கு இடம் ராணுவத்துக்கு தானாகவே கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறை, உள்துறை , எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றை ராணுவம் தனவசம் வைத்துள்ளது.

இதன் மூலம், மியான்மா் ஆட்சியில் ராணுவம் மறைமுக ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த நிலையில், ராணுவப் புரட்சி மூலம் தற்போது ராணுவம் ஆட்சியை நேரடியாகக் கைப்பற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com