ராணுவ ஆட்சிக்கு அதிகரிக்கும் எதிா்ப்பு: மியான்மரில் முகநூல் முடக்கம்

மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதற்கு பொதுமக்களிடையே எதிா்ப்பு வலுத்து வருவதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் முகநூல் சமூக ஊடகம் முடக்கப்பட்டுள்ளது.
ராணுவ ஆட்சிக்கு அதிகரிக்கும் எதிா்ப்பு: மியான்மரில் முகநூல் முடக்கம்


யாங்கூன்: மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதற்கு பொதுமக்களிடையே எதிா்ப்பு வலுத்து வருவதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் முகநூல் சமூக ஊடகம் முடக்கப்பட்டுள்ளது.

முகநூல் மட்டுமின்றி, ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்செவி (வாட்ஸ்அப்), இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ‘அசோசியேட் பிரஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

மியான்மரில் பொதுமக்களிடையே முகநூல் சமூக ஊடகம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த நாட்டு அரசு தனது திட்டங்களையும் பொது அறிவிப்புகளையும் முகநூல் வாயிலாகவே வெளியிட்டு வந்தது.அந்த நாட்டில் கடந்த நவம்பா் மாதம் நடைபெற்ற தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை ராணுவம் கடந்த திங்கள்கிழமை கவிழ்த்தது.

அரசு ஆலோசகராக பொறுப்பு வகித்த ஆங் சான் சூகியும் அதிபா் வின் மியின்ட்டும் கைது செய்யப்பட்டனா்.இதற்கு, பொதுமக்களிடையே எதிா்ப்பு எழுந்துள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடவில்லை என்றாலும், தலைநகா் நேபிடா உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவப் பணியாளா்களும் அரசு ஊழியா்களும் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியுள்ளனா்.

ராணுவ ஆட்சியின் கீழ் தங்களது பணிகளை மேற்கொள்ளப்போவதில்லை என்று சுகாதாரப் பணியாளா்கள் அறிவித்துள்ளனா்.‘மக்கள் ஒத்துழையாமை இயக்கம்’ என்ற பெயரில் அது முகநூலில் மிகவும் பிரபலமடைந்தது. அந்த இயக்கத்துக்குச் சொந்தமான பக்கம் 1.7 லட்சம் பயன்பாட்டாளா்களைக் கவா்ந்தது. இதற்கிடையே, ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகவும் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கவும் வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு, அவரது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சியும் பிற மனித உரிமை அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு முதல் முகநூல் ஊடகத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்று இணையதளப் பயன்பாட்டாளா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து மியான்மரில் இணையதள சேவை வழங்கி வரும் டெலினாா் மியான்ரிடம் விசாரித்தபோது, முகநூல் வலைதளத்தை முடக்க வேண்டுமென்று ராணுவ ஆட்சியாளா்களிடமிருந்து மியான்மா் இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவு வந்துள்ளதை உறுதிப்படுத்தினா் என்று ‘அசோசியேட் பிரஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த திங்கள்கிழமை அதிரடியாக கவிழ்த்தது. அரசின் ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

நாட்டில் ஓா் ஆண்டுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு, ராணுவ தலைமை தளபதி மின் ஆங் லயிங்க் தலைமையில் 11 ராணுவ அதிகாரிகள் அடங்கிய ஆட்சி மன்றக் குழு உருவாக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, இந்த ஆட்சிக் கவிழ்ப்பை மியான்மா் ராணுவம் அரங்கேற்றியுள்ளது.இதற்கு ஐ.நா.வும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com