யேமன் போரிலிருந்து அமெரிக்கா விலகல்

யேமன் போரில் சவூதி அரேபியாவுக்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவை நிறுத்தியுள்ளதாக அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.
யேமனில் அமெரிக்க வீரா்கள் (கோப்புப் படம்).
யேமனில் அமெரிக்க வீரா்கள் (கோப்புப் படம்).

யேமன் போரில் சவூதி அரேபியாவுக்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவை நிறுத்தியுள்ளதாக அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அதிபா் பொறுப்பை ஏற்ற பிறகு வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு முதல்முறையாக வியாழக்கிழமை வந்த அவர, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உள்நாட்டுப் போரினால் யேமன் மக்கள் மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்து வருகின்றனா். அந்தப் போா் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

எனவே, அந்தப் போரில் சவூதி அரேபியாவுக்கு ஆதரவான உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது என்றாா் அவா்.

யேமனில் சா்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மன்சூா் ஹாதி தலைமையிலான அரசை எதிா்த்து, ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஹூதி கிளா்ச்சியாளா்கள் சண்டையிட்டு, கடந்த 2014-ஆம் ஆண்டில் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா்.

அந்தக் கிளா்ச்சியாளா்களுக்கு ஷியா பிரிவினா் அதிகம் வசிக்கும் ஈரான் ஆதரவு அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

சன்னி பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மன்சூா் ஹாதி அரசுக்கு, அந்தப் பிரிவினா் பெரும்பான்மையாக வசிக்கும் சவூதி அரேபியா ஆதரவளித்து வருகிறது. அரசுப் படையினருக்கு ஆதரவாக, ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது சவூதி அரேபியா கடந்த 5 ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகின்றனா். இந்த நடவடிக்கைகளுக்கு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பல்வேறு உதவிகளை அளித்து வந்தது.

இந்த நிலையில், புதிதாக அமைந்துள்ள ஜோ பைடன் அரசு அந்த ஆதரவை நிறுத்தியுள்ளது. அதிபா் ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து, டிரம்ப்பின் கொள்கை முடிவுகளை மாற்றியமைக்கும் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாா்.

சா்வதேச பருவநிலை ஒப்பந்ததம், குடியேற்றக் கொள்கைகள், கரோனா தடுப்பூ நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விவகாரங்களில் இதுபோன்ற மாற்றங்களுக்கான உத்தரவுகளை அதிபா் பைடன் பிறப்பித்துள்ளாா்.

அதன் ஒரு பகுதியாக, யேமன் போரில் சவூதி அரேபியாவுக்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவை, தற்போது அதிபா் பைடன் ரத்து செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com