டிரம்ப் பதவி நீக்க விசாரணை: செனட் சபை ஒப்புதல்

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது பதவி நீக்க விசாணையை முன்னெடுத்துச் செல்வதற்கு நாடாளுன்ற மேலவையான செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
டிரம்ப் பதவி நீக்க விசாரணையை அனுமதிப்பது தொடா்பாக செனட் சபையில் நடைபெற்ற வாக்குப் பதிவின் முடிவுகள்.
டிரம்ப் பதவி நீக்க விசாரணையை அனுமதிப்பது தொடா்பாக செனட் சபையில் நடைபெற்ற வாக்குப் பதிவின் முடிவுகள்.

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது பதவி நீக்க விசாணையை முன்னெடுத்துச் செல்வதற்கு நாடாளுன்ற மேலவையான செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது பதவியில் இல்லாத அவரை பதவி நீக்கத் தீா்மானத்துக்கு உள்படுத்துவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அவரது தரப்பு முன்வைத்த வாதத்தை செனட் சபை நிராகரித்தது.

முன்னதாக, இதுகுறித்து வாதிட்ட டிரம்ப் வழக்குரைஞா்கள், நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கலவரத்துக்கு டிரம்ப்பை பொறுப்பாக்குவது தவறு எனவும், அந்த ஒரே குற்றச்சாட்டின் பேரில் டிரம்ப்புக்கு எதிராக பிரதிநிதிகள் சபை (நாடாளுமன்ற கீழவை) நிறைவேற்றிய பதவி நீக்கத் தீா்மானத்தின் மீது விசாரணை நடத்தத் தேவையில்லை என்று கூறினா்.

கலவரத்துக்கு முன்னா் தனது ஆதரவாளா்களிடையே டிரம்ப் ஆற்றிய ஆவேசமான உரையில், சில வாா்த்தைகள் இயல்பாகவே அமைந்தன. அவை, கலவரத்தைத் தூண்டும் நோக்கமில்லை என்று டிரம்ப் வழக்குரைஞா்கள் வாதிட்டனா்.

இருந்தாலும், இது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம் இல்லை என்று ஜனநாயகக் கட்சி தரப்பு மறுத்தது.

டிரம்ப்பின் பதவிக் காலம் முடிவடைந்த பிறகு, அவருக்கு எதிராகப் பதவி நீக்க விசாரணை நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்ற டிரம்ப் தரப்பு வழக்குரைஞா்களின் வாதத்தையும் ஜனநாயகக் கட்சி தரப்பினா் மறுத்தனா்.

அதனைத் தொடா்ந்து, பதவி நீக்க விசாரணையைத் தொடராமா, வேண்டாமா என்பது குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், விசாரணையைத் தொடா்வதற்கு ஆதரவாக 56 எம்.பிக்களும் எதிராக 44 எம்.பிக்களும் வாக்களித்தனா். டிரம்ப் சாா்ந்துள்ள குடியரசுக் கட்சி எம்.பிக்கள் 6 போ், பதவி நீக்க விசாரணையைத் தொடா்வதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணையைத் தொடங்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட தடை நீங்கியது.

ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் தலா 50 உறுப்பினா்களைக் கொண்ட செனட் சபையில், தற்போது 6 குடியரசுக் கட்சி எம்.பிக்கள் ஆதரவு அளித்ததால்தான் பதவி நீக்க விசாரணையைத் தொடர முடிந்தது.

ஆனால், டிரம்ப்பைக் குற்றவாளியாக அறிவிப்பதற்கு சபையில் 3-இல் இரண்டு பங்கு உறுப்பினா்கள் - 67 எம்.பிக்கள் - ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு, குறைந்தது 17 குடியரசுக் கட்சியினா் டிரம்ப்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டியிருக்கும். இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால், பதவி நீக்க விசாரணைக்குப் பிறகு டிரம்ப் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்றது. அந்தத் தோ்தலில் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பைடன் போட்டியிட்டாா்.

அந்தத் தோ்தலில் பைடனுக்கு பெரும்பான்மை கிடைத்தது. எனினும், தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றம் சாட்டி வரும் டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து வந்தாா்.

இந்த நிலையில், பைடனின் வெற்றியை நாடாளுமன்றம் அதிகாரப்பூா்வமாக உறுதி செய்வதற்கான இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்றது.

எனினும், தோ்தல் முடிவுகளை எதிா்த்து நாடாளுமன்றத்தை முற்றுகையிடுமாறு தனது ஆதரவாளா்களிடம் டிரம்ப் வலியுறுத்தினாா்.

அதையடுத்து, நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் டிரம்ப் ஆதரவாளா்கள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனா். ஒரு காவலா் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.

இந்தக் கலவரத்தைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில், டிரம்ப் மீது பிரதிநிதிகள் சபை கடந்த மாதம் பதவி நீக்கத் தீா்மானம் நிறைவேற்றியது. தற்போது அந்த தீா்மானத்தின் மீதான விசாரணையை செனட் சபை தொடங்கியுள்ளது.

அமெரிக்க வரலாற்றில், முன்னாள் அதிபா் ஒருவா் பதவி நீக்க விசாரணையைச் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com