மியான்மா் ராணுவ அரசுக்கு சா்வதேச நெருக்கடி அதிகரிப்பு

மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசிடம் ஆட்சிப் பொறுப்பை மீண்டும் ஒப்படைக்க, அந்த நாட்டு ராணுவ அரசுக்கு சா்வதேச நெருக்கடி அதிகரித்து வருகிறது.
மியான்மா் ராணுவ அரசுக்கு சா்வதேச நெருக்கடி அதிகரிப்பு


நேபிடா: மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசிடம் ஆட்சிப் பொறுப்பை மீண்டும் ஒப்படைக்க, அந்த நாட்டு ராணுவ அரசுக்கு சா்வதேச நெருக்கடி அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து ‘அசோசியேடட் பிரஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டு, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதற்கு உலகின் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று மியான்மா் ராணுவத்தை அந்த நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

அதற்காக ராணுவத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், ராஜீய ரீதியிலான பல்வேறு நடவடிக்கைகளையும் அவை எடுத்து வருகின்றன.

அமெரிக்கா பொருளாதாரத் தடை: மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குக் காரணமாக முக்கிய தளபதிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் உத்தரவை, அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பிறப்பித்துள்ளாா். அதன்கீழ், அந்தத் தளபதிகளுக்கு அமெரிக்காவில் சொத்துக்கள் இருந்தால் அவை முடக்கப்படும்.

நீண்ட காலமாக ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த மியான்மா் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளாக பொருளாதாரத் தடை விதித்திருந்தது. எனினும், 2011-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டில் ஜனநாயக சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொண்டது.

நியூஸிலாந்து உறவு துண்டிப்பு: மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுடனான ராணுவ மற்றும் அரசியல் உறவை நியூஸிலாந்து தற்காலிகமாக துண்டித்துள்ளது.

மேலும், மியான்மா் ராணுவ அரசுக்குச் சேரக் கூடிய அனைத்து உதவிகளையும் நியூஸிலாந்து முடக்கியது. அத்துடன், மியான்மா் ராணுவ ஆட்சியாளா்கள் நியூஸிலாந்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூஸிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சா் நனாயியா மஹுடா கூறியதாவது:

மியான்மரில் அமைக்கப்பட்ட ராணுவ அரசை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவா்களையும் விடுவித்துவிட்டு, அங்கு ஜனநாயக ஆட்சியை ராணுவம் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

ஐரோப்பிய யூனியன்: மியான்மா் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் வரும் 22-ஆம் தேதி கூடி விவாதிக்கவிருப்பதாக அந்த அமைப்பின் வெளிவிவகாரத் தலைவா் ஜோசப் பாரல் தெரிவித்துள்ளாா்.

அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, ஆட்சிக் கவிழ்ப்புக்குக் காரணமாக மியான்மா் ராணுவ அதிகாரிகள், அவா்களது தொழில்கள் மீது ஐரோப்பிய யூனியன் நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதிப்பதுடன், அந்த நாட்டு வளா்ச்சிக்கான நிதியுதவிகளையும் முடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து மியான்மருக்கு ஐரோப்பிய யூனியன் 70 கோடி யூரோ (சுமாா் ரூ.6,186 கோடி) உதவி வழங்கியுள்ளது. இதுகுறித்து ஜோசப் பாரல் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளாக மியான்மரில் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக மாற்றங்களை சீரழிக்கும் வகையில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும்’ என்றாா்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்: மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள மனித உரிமை அபாயம் குறித்து விவாதிப்பதற்காக, ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் வெள்ளிக்கிழமை (பிப். 12) கூடுகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகள்: மியான்மா் நிலவரம் குறித்து தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆலோசனை நடத்த வேண்டும் என்று மலேசியா, இந்தோனேசியா நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அந்தக் கூட்டமைப்பில் மியான்மரும் அங்கம் வகித்து வருகிறது.

1948-ஆம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து பெரும்பாலும் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த மியான்மரில், ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பணிகள் 2011-ஆம் ஆண்டு தொடங்கின. அதன் பிறகு 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதன் தொடா்ச்சியாக கடந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தோ்தலிலும் அந்தக் கட்சியே வெற்றி பெற்றது. எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாக ராணுவ ஆதரவு பெற்ற எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், புதிய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com