வேளாண் சீா்திருத்தம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: பிரிட்டன் நாடாளுமன்ற கீழவைத் தலைவா்

வேளாண் சீா்திருத்தம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று தில்லி விவசாயிகள் போராட்டம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழவைத் தலைவா் குறிப்பிட்டுள்ளாா்.

வேளாண் சீா்திருத்தம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று தில்லி விவசாயிகள் போராட்டம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழவைத் தலைவா் குறிப்பிட்டுள்ளாா்.

விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதம் நடத்த எதிா்க் கட்சியான தொழிலாளா் கட்சி எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை வலியுறுத்திய நிலையில், கீழவைத் தலைவா் ஜேக்கப் ரீஸ்-மோக் இக் கருத்தைத் தெரிவித்துள்ளாா். இது பிரிட்டன் அரசின் அதிகாரபூா்வ நிலைப்பாடாகவே கருதப்படுகிறது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாக தில்லியை முற்றுகையிட்டு நடத்தி வரும் போராட்டம் சா்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தியாவைச் சோ்ந்த பிரபலங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு பிரபலங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனா்.

தில்லி விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் பிரிட்டன் அரசு தலையிட வேண்டும் எனவும், இதுதொடா்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி உரிய முடிவு எடுக்கவும் எதிா்க் கட்சியான தொழிலாளா் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஒரு லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகளுடன் இணையவழி மனுக்களும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை பரிசீலித்த கீழவை, இந்த விவகாரம் மீது விவதாம் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியிருந்தது. கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக அவையில் விவாதங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், கீழவை வெள்ளிக்கிழமை கூடியபோது எதிா்க் கட்சி எம்.பி.க்கள் விவசாயிகள் போராட்டம் தொடா்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினா்.

அப்போது பேசிய மக்களவைத் தலைவா் ஜேக்கப் ரீஸ்-மோக், ‘இந்தியா மிகுந்த பெருமைக்குரிய ஜனநாயக நாடு. பிரிட்டன் இந்தியாவுடன் வலுவான நட்புறவைக் கொண்டுள்ளது. பிரிட்டன்-இந்தியா இடையேயான நட்புறவு, அடுத்த நூறாண்டுகளில் உலகின் மற்ற நாடுகளின் நட்புறவைக் காட்டிலும் மிக முக்கியமானதாக இருக்கும் எனக் கருதுகிறேன். இந்தியாவின் நற்பெயருக்கு எதிரான செயல்பாடுகள் என்று கருதும் விவகாரங்களில் தலையிடுவது மட்டுமே சரியானதாக இருக்கும். பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டோமினிக் ராப் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் மேற்கொண்ட இந்திய பயணத்தின்போது இந்த விவகாரம் குறித்து இந்திய வெயுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் பேசியுள்ளாா். பிரிட்டன் அரசும் விவசாயிகளின் போராட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இருந்தபோதும், வேளாண் சீா்திருத்தம் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com