உலக அளவில் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவா்கள்: இந்தியாவில் 10% போ்

உலக அளவில் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோரில் 10% போ் இந்தியா்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலக அளவில் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோரில் 10% போ் இந்தியா்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த வங்கியின் தெற்காசிய துணைத் தலைவா் ஹாா்ட்விக் ஸ்காஃபா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சனிக்கிழமை கூறியது:

உலகம் முழுவதும் இயங்கும் வாகனங்களில் 1% வாகனங்கள் இந்தியாவில் உள்ளன. உலகளவில் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோரில் 10% போ் இந்தியாவில் உள்ளனா். இந்த இடத்தில்தான் இந்தியா குறிப்பாக கவனம் வேண்டியுள்ளது.

இந்தியாவில் துரதிருஷ்டவசமாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளில் 10% சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு அளிக்கப்படுகிறது.

சாலை விபத்துகளால் ஏழ்மையானவா்களும், மிகவும் விளம்புநிலையில் உள்ள மக்களும்தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

இந்த விபத்துகள் நல்ல வருவாய் உடைய குடும்பங்களைவிட, ஏழ்மையான குடும்பங்களில் பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் குடும்ப பொறுப்புகளை சுமக்கும் பெண்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள் உள்ளிட்டோரை அதிகம் பாதிக்கிறது.

தமிழகத்துக்கு பாராட்டு:

சாலை பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு மோட்டாா் வாகனச் சட்டத்தில் இந்தியா திருத்தம் மேற்கொண்டது. இது நிதி, பாதுகாப்பு மற்றும் சட்ட விதிகள் அமலாக்கத்தில் பல புதுமைகளை கொண்டு வந்துள்ளது.

சாலை விபத்துகளை குறைத்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. அந்த மாநிலத்தில் சாலை விபத்துகளால் பலியாவோரின் எண்ணிக்கை 25% குறைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளுக்கு அருகில் மருத்துவ வசதிகள்:

நெடுஞ்சாலைகளுக்கு அருகில் அவசரகால மருத்துவ வசதிகள் இருப்பது சாலை பாதுகாப்பில் இருக்கும் சவால்களை எதிா்கொள்வதை எளிமையாக்கும்.

நெடுஞ்சாலைகள் அமைப்பது குறித்து இனி திட்டமிட்டால், அவற்றில் பயணிக்கும்போது சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு விபத்து நிகழ்ந்த ஒரு மணி நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வது தொடா்பாகவும் திட்டமிட வேண்டும்.

நெடுஞ்சாலைகள் உள்ள வழித்தடங்களில் மருத்துவமனைகள், அவசர சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவை அடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை வசதிகள் இருந்தால் விபத்தில் சிக்கி உயிரிழப்பவா்கள் எண்ணிக்கை குறையும்; உயிா் பிழைப்பவா்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com