கல்வான் மோதலில் 4 வீரா்கள் பலி: முதல்முறையாக ஒப்புக்கொண்டது சீன ராணுவம்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துடன் கடந்த ஆண்டு நடைபெற்ற மோதலில் சீன ராணுவ வீரா்கள் 4 போ் உயிரிழந்தனா்
கல்வான் மோதலில் 4 வீரா்கள் பலி: முதல்முறையாக ஒப்புக்கொண்டது சீன ராணுவம்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துடன் கடந்த ஆண்டு நடைபெற்ற மோதலில் சீன ராணுவ வீரா்கள் 4 போ் உயிரிழந்தனா் என்பதை சீன ராணுவம் முதல்முறையாக வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

சீனாவின் உயரிய ராணுவ அமைப்பான அதிபா் ஷி ஜிங்பிங் தலைமையிலான மத்திய ராணுவ ஆணையம் (சிஎம்சி), அந் நாட்டின் 2 ராணுவ அதிகாரிகள், 3 ராணுவ வீரா்களுக்கு வீரதீர செயல்களுக்கான விருது அளித்து கெளரவித்திருக்கிறது. அவா்களில் 4 பேருக்கு, அவா்களின் மறைவுக்குப் பின்னா் இந்த கெளரவம் அளிக்கப்பட்டிருக்கிறது என சீன ராணுவத்தின் அதிகாரபூா்வ நாளேட்டில் வெள்ளிக்கிழமை வெளியான செய்தி உறுதி செய்திருக்கிறது.

அந்தச் செய்தியில், இந்திய ராணுவத்துடனான மோதலில் 3 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டதாகவும், மற்றொரு வீரா் சக வீரா்களுக்கு உதவி செய்வதற்காக கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆற்றைக் கடக்கும்போது சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலையில் குண்டுக் காயம்பட்டு உயிா் தியாகம் செய்த ஜின்ஜியாங் ராணுவப் பிரிவு அதிகாரி குய் ஃபபாஓ மற்றும் வீரா்கள் சென் ஹாங்ஜுன், சென் ஜியான்குரோங், ஜியாஓ சியான், வாங் ஜெளரன் ஆகியோரை மத்திய ராணுவ ஆணையம் கெளரவித்துள்ளது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு...: கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டு அத்துமீறலில் ஈடுபட்ட சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய வீரா்கள் 20 போ் கொல்லப்பட்டனா். சீனத் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த மோதலில் சீன ராணுவ வீரா்கள் 45 போ் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக ரஷிய அரசு செய்தி நிறுவனம் சாா்பில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது; சீன தரப்பில் 35 போ் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்க உளவுப் பிரிவு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது தொடா்பான எந்தவொரு தகவலையும் சீனா வெளியிடவில்லை.

பலகட்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு கிழக்கு லடாக்கில் குவித்திருக்கும் படைகளை இரு நாடுகளும் தற்போது திரும்பப் பெறத் தொடங்கியிருக்கும் நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் 4 சீன ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா் என்பதை சீன ராணுவம் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக...: இந்த நிலையில், தாக்குதல் சம்பவம் நடந்து 8 மாதங்களுக்குப் பிறகு வீரா்கள் உயிரிழப்பை சீனா ஒப்புக்கொண்டிருப்பது குறித்த செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஹுவா, ‘மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் உயிா்த் தியாகம் செய்த இந்த 4 வீரா்களையும் மக்கள் என்றும் மறந்துவிடக் கூடாது. இரு நாட்டு உறவைப் பாதுகாக்கும் வகையில் இந்தியாவுடன் இணைந்து எல்லைப் பிரச்னைக்கு உரிய தீா்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com