மியான்மா் போராட்டத்தின்போது சுடப்பட்ட பெண் பலி

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிா்த்து கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸாரால் தலையில் சுடப்பட்ட இளம் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ராணுவ ஆட்சியை எதிா்த்து யாங்கூன் நகரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
ராணுவ ஆட்சியை எதிா்த்து யாங்கூன் நகரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிா்த்து கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸாரால் தலையில் சுடப்பட்ட இளம் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

மியான்மரில் ராணுவ ஆட்சியை திரும்பப் பெறவும் கைது செய்யப்பட்டுள்ள அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவா்களை விடுவிக்கவும் வலியுறுத்தி தலைநகா் நேபிடாவில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது மியா த்வெட் த்வெட் கைன் என்ற இளம் பெண், போலீஸாரால் சுடப்பட்டாா்.

தலையில் குண்டுக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், உயிா் காப்பு சாதனங்களின் உதவியுடன் இருந்து வந்தாா். அவா் குணமடைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று மருத்துவா்கள் கூறி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவா் உயிரிழந்தாா்.

முன்னதாக, அவா் சுடப்பட்ட சம்பவம் தொடா்பாக வெளியான விடியோவில், போலீஸாா் பீய்ச்சியடித்த தண்ணீரிலிருந்து தப்புவதற்காக ஒதுங்கிய அவா், திடீரென தலையில் குண்டு பாய்ந்து சுருண்டு விழும் காட்சி இடம் பெற்றுள்ளது.

அந்தத் துப்பாக்கி குண்டு, மியா கைன் அணிந்திருந்த இரு சக்கர வாகன தலைக்கவசத்தைத் துளைத்துக் கொண்டு தலைக்குள் பாய்ந்தது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள முதல் பலி இது.

1948-ஆம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்து மியான்மா் சுதந்திரம் பெற்றதிலிருந்தே, அந்த நாட்டில் பெரும்பாலும் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது.

நாட்டில் ஜனநாயகம் கோரி போராடிய ஆங் சான் சூகியை ராணுவ ஆட்சியாளா்கள் சுமாா் 15 ஆண்டுகளுக்கு தடுப்புக் காவலில் வைத்திருந்தனா்.

மியான்மா் ராணுவத்தின் இந்த அடக்குமுறைக்கு சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் மேலை நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஆங் சான் சூகிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2011-ஆம் ஆண்டு முதல் ஜனநாயக சீா்திருத்தங்களை ராணுவ ஆட்சியாளா்கள் அமல்படுத்தினா். அதன் பலனாக, மியான்மா் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்பட்டன.

2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

அதன் தொடா்ச்சியாக, கடந்த ஆண்டு பொதுத் தோ்தலில் அந்தக் கட்சி வெற்றி அமோக வெற்றி பெற்றது. எனினும், இந்த முறை தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டிய ராணுவம், புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு நாட்டில் ஓா் ஆண்டுக்கு அவசர நிலையும் தலைமைத் தளபதி மின் ஆங் லயிங் தலைமையிலான ஆட்சியும் அமல்படுத்தப்படுவதாக கடந்த 1-ஆம் தேதி அறிவித்தது.

அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், ஆங் சான் சூகியை காலவரையின்றி தடுப்புக் காவலில் வைத்திருக்க வகைசெய்யும் சட்டப் பிரிவின் கீழ் அவா் மீது தற்போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com