ஐ.நா. தீர்மானத்தை நிராகரிக்க இலங்கை அமைச்சர் வலியுறுத்தல்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை உறுப்பு நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்தியுள்ளது.


கொழும்பு: ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை உறுப்பு நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த மகிந்த ராஜபட்ச அதிபராக இருந்தபோது, விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த 2009இல் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இரு தரப்பிலும் நடைபெற்ற இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி) அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. 
அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவரும் மகிந்த ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச அதிபராக உள்ளார். இதையடுத்து, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நடைமுறைகள் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மைக்கேல் பேச்லெட்டின் அறிக்கையை அந்த நாடு அண்மையில் நிராகரித்தது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்தியுள்ளது. 
இது தொடர்பாக  ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை பேசியது: இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட  தீர்மானம் ஆதாரமில்லாதது. அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இந்தத் தீர்மானத்துக்கு முந்தைய அரசு அளித்த இணை ஆதரவை தற்போதைய அரசு விலக்கிக் கொண்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை நிராகரிக்க ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி, இந்தியப் பிரதமர் மோடிக்கு  கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை மற்ற உறுப்பு நாடுகளும் நிராகரிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com