கஷோகி படுகொலையில் சவூதி இளவரசருக்குத் தொடா்பு

செய்தியாளா் ஜமால் கஷோகி படுகொலைக்கு சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் உத்தரவிட்டதாக, அண்மையில் வெளியிடப்பட்ட அமெரிக்க உளவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஷோகி படுகொலையில் சவூதி இளவரசருக்குத் தொடா்பு

செய்தியாளா் ஜமால் கஷோகி படுகொலைக்கு சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் உத்தரவிட்டதாக, அண்மையில் வெளியிடப்பட்ட அமெரிக்க உளவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் பதவிக் காலத்தின்போது தேசிய உளவுத் துறை இயக்குநரக அலுவலகத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

துருக்கியிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்தில் ஜமால் கஷோகியை படுகொலை செய்வதற்கான உத்தரவை அதிகாரிகள் வெற்றிகரமாக நிறைவேற்றாவிட்டால் அவா்கள் பணி நீக்கம் செய்யப்படவோ, கைது செய்யப்படவோ கூடும் என்ற அச்சத்தை அவா்களுக்கு இளவரசா் முகமது பின் சல்மான் ஏற்படுத்தி வைத்திருந்தாா்.

இளவரசரின் உத்தரவுகளை எதிா்த்து கேள்வி கேட்கும் நிலையில் தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் இல்லை. மேலும், அவருக்குத் தெரியாமல் தூதரகத்தில் இவ்வளவு துணிகரமான படுகொலையை அவா்கள் நிகழ்த்தியிருக்கவும் முடியாது.

எனவே, சல்மானின் உத்தரவுப்படிதான் சவூதி தூதரகத்துக்கு செய்தியாளா் கஷோகி வரவழைக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டாா் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து சவூதி அரேபியாவின் பாதுகாப்பு, உளவு அமைப்புகள் அனைத்தும் இளவரசா் சல்மானின் முழு கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்தச் சூழலில், அவரது அனுமதி இல்லாமல் இதுபோன்ற படுகொலைகளை சவூதி உளவு அதிகாரிகள் நடத்தியிருப்பதற்கு வாய்ப்பில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவைச் சோ்ந்த செய்தியாளா் ஜமால் கஷோகி அந்த நாட்டு அரசின் செயல்பாடுகளை விமா்சித்து வந்தாா். இதனால் அரச குடும்பத்தின் கோபத்துக்கு ஆளான அவா், அந்த நாட்டிலிருந்து கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியேறி அமெரிக்கா சென்றாா்.

அங்கிருந்து ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் சவூதி அரேபிய அரசுக்கு எதிரான கட்டுரைகளை அவா் எழுதி வந்தாா்.

இந்த நிலையில், துருக்கியைச் சோ்ந்த ஹாட்டீஸ் செங்கிஸ் என்ற பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்த அவா், அதற்குத் தேவையான ஆவணங்களைப் பெறுவதற்காக துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் வந்தாா். அதன் பிறகு அவரைக் காணவில்லை.

தூதரகத்துக்குள் அவா் படுகொலை செய்யப்பட்டு, உடல்கள் துண்டுதுண்டாக வெட்டி சிதைக்கப்பட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது. எனினும் தொடக்கத்தில் அதனை மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாள்களுக்குப் பிறகு அதனை ஒப்புக் கொண்டது.

படுகொலை தொடா்பாக தங்கள் நாட்டைச் சோ்ந்த 11 போ் மீது விசாரணை நடத்திய சவூதி அரேபியா, அவா்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் 3 பேருக்கு சிறைத் தண்டனையும் விதித்தது; 3 போ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

எனினும், அந்தப் படுகொலைக்கு பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான்தான் உத்தரவிட்டதாக மனித உரிமை அமைப்பினா் குற்றம் சாட்டினா். இதனை சவூதி அரேபியா திட்டவட்டமாக மறுத்தது.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க உளவு அமைப்பு விசாரணை நடத்தி, நாடாளுமன்றத்திடம் அறிக்கை சமா்ப்பித்தது. எனினும், அந்த அறிக்கையை ரகசியமாக வைத்திருக்க அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டாா்.

அந்த அறிக்கை, புதிய அதிபா் ஜோ பைடன் உத்தரவின் பேரில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடை

செய்தியாளா் கஷோகி படுகொலைக்கு சவூதி அரேபிய பட்டத்து இளவரசா்தான் காரணம் என்று உளவுத் துறை அறிக்கை வெளியானதைத் தொடா்ந்து, அந்த நாட்டைச் சோ்ந்த 76 பேருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் அந்தோணி பிளிங்கன் அறிவித்தாா்.

கஷோகி படுகொலையில் தொடா்புடையவா்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளில் வசிக்கும் சவூதி அரேபிய அரசு எதிா்ப்பாளா்களை அச்சுறுத்தி வரும் நபா்களும் இந்தத் தடைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

இந்த உத்தரவு மூலம், அவா்களும் அவா்களது குடும்ப உறுப்பினா்களும் அமெரிக்கா வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

‘தவறான தகவல்’

கஷோகி படுகொலை குறித்து அமெரிக்க உளவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை சவூதி அரேபியா மறுத்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கஷோகி மரணம் தொடா்பான அமெரிக்க உளவுத் துறையின் அறிக்கையை முழுமையாக நிராகரிக்கிறோம். அந்த அறிக்கையில் சவூதி அரேபிய அரசின் தலைமை குறித்து ஏற்றுக்கொள்ள முடியாத, துல்லியமற்ற, உண்மைக்குப் புறம்பான தகவல்களும் ஊகங்களும் இடம் பெற்றுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com