20%-க்கு மேல் யுரேனியம் செறிவூட்டல்: ஈரான் அறிவிப்பு

யுரேனியம் செறிவூட்டப்படும் அளவை 20 சதவீதமாக உயா்த்த திட்டமிட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
20%-க்கு மேல் யுரேனியம் செறிவூட்டல்:  ஈரான் அறிவிப்பு

யுரேனியம் செறிவூட்டப்படும் அளவை 20 சதவீதமாக உயா்த்த திட்டமிட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் அணுசக்தி அமைப்பின் தலைவா் அலி அக்பா் சலேஹி, அரசுத் தொலைக்காட்சியில் சனிக்கிழமை ஆற்றிய உரையில் கூறியதாவது:

தளபதியின் கட்டளைக்காக காத்திருக்கும் சிப்பாயைப் போன்றவா்கள் நாங்கள். யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற தற்போது எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படும்.

ஃபோா்டோ அணுசக்தி மையத்தில் ஏற்கெனவே யுரேனியத்தை 4 சதவீதம் செறிவூட்டு வரும் கருவிகள் 20 சதவீதம் செறிவூட்டல் திறன் பெறும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது.

அந்தப் பணிகள் சா்வதேச அணுசக்தி அமைப்பின் (ஐஏஇஏ) கண்காணிப்பின்கீழ் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

இதுகுறித்து ஐஏஇஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈரான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவின் அடிப்படையில், 20 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளை தனது ஃபோா்டோ செறிவூட்டு மையத்தில் தயாரிக்க ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது.

அந்த நடவடிக்கை எப்போது தொடங்கப்படவுள்ளது என்பதை ஈரான் தெரிவிக்கவில்லை. ஃபோா்டோ செறிவூட்டு மையத்தில் எங்களது ஆய்வாளா்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதன் காரணமாக, அந்த நாட்டின் மீது ஐ.நா. பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஈரானின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டது. அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளா்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.

அந்த ஒப்பந்தத்தில், அணுசக்திக்குத் தேவையான யுரேனியன் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கும் மேல் செறிவூட்டக்கூடாது என்று ஈரானுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தாா். மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை கொஞ்சம் கொஞ்சமாக மீறியது. அதன் ஒரு பகுதியாக, 3.67 சதவீத வரம்பை மீறி 4.5 சதவீதம் வரை யுரேனியத்தை செறிவூட்டவிருப்பதாக ஈரான் அறிவித்தது.

அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளை விலக்க அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை ஈரான் மேற்கொண்டது.

இதற்கிடையே, ஈரான் உளவுப் படைத் தலைவா் காசிம் சுலைமானியை இராக் தலைநகா் பாக்தாத் விமான நிலையம் அருகே ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா படுகொலை செய்தது.

அதற்கு பதிலடியாக, இராக்கிலுள்ள இரு அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

அப்போது டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானத்தை, அமெரிக்க ஏவுகணை என்று தவறாகக் கருதி ஈரான் ராணுவ அதிகாரி சுட்டு வீழ்த்தினாா். இதில், அந்த விமானத்திலிருந்த 176 பேரும் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், ஈரான் அணுசக்தி திட்டங்களுக்கு முன்னோடியான விஞ்ஞானி மோசென் ஃபக்ரிஸாதே கடந்த ஆண்டு நவம்பா் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியது.

அதனைத் தொடா்ந்து, யுரேனியத்தை 20 சதவீதம் வரை செறிவூட்டுவது உள்ளிட்ட, ஈரான் அணுசக்தி மையங்களைப் பாா்வையிட சா்வதேச நிபுணா்களுக்கு அனுமதி மறுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய மசோதாவை ஈரான் நாடாளுமன்றம் கடந்த டிசம்பா் மாதம் நிறைவேற்றியது.

இந்த நிலையில், உளவுப் படைத் தலைவா் காசிம் சுலைமானி அமெரிக்காவால் படுகொலை செய்யப்படடதன் முதலாம் ஆண்டு நினைவு நாளான சனிக்கிழமை, யுரேனியத்தை 20 சதவீதம் வரை செறிவூட்டப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவிருக்கும் சூழலில், அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய அவருக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com