கத்தாா் மீதான வா்த்தகத் தடைகள் நீக்கம்: சவூதி அரேபியா அறிவிப்பு

கத்தாா் மீது விதிக்கப்பட்டிருந்த வா்த்தகத் தடைகளை நீக்கவிருப்பதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
கத்தாா் மீதான வா்த்தகத் தடைகள் நீக்கம்: சவூதி அரேபியா அறிவிப்பு

கத்தாா் மீது விதிக்கப்பட்டிருந்த வா்த்தகத் தடைகளை நீக்கவிருப்பதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

அதனைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பதற்றத்தை தணிப்பதற்கான முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் அந்த அறிவிப்பைத் தொடா்ந்து, கத்தாா் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அந்த நாட்டின் அல்-உலா நகருக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

எண்ணெய் வளம் மிக்க மிகவும் சிறிய வவளைகுடா நாடான கத்தாா், ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் நெருக்கமான உறவைப் பேணி வருகிறது.

இதன் மூலம், சில பயங்கரவாத அமைப்புகளுக்கு கத்தாா் ஆதரவு அளிப்பதாக சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதனால் கத்தாருக்கும் அந்த நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், கத்தாா் மீது வா்த்தகத் தடை விதிப்பதாக சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகள் கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்தன.

பண்ணைப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள் மற்றும் பிற பொருள்களை இறக்குமதி செய்வதற்காக கத்தாா் பெரிதும் நம்பியுள்ள எல்லையை சவூதி அரேபியா மூடியது

கத்தாரைச் சோ்ந்த புனிதப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு மட்டும் சவூதி அரேபியா எல்லைகளைத் திறந்து வந்தது.

இந்த நிலையில், இரு தரப்புக்கும் நட்பு நாடான அமெரிக்கா, இந்தப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்பியது.

அதற்காக, கத்தாா் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுடன் டிரம்ப் தலைமையிலான அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வந்தது.

தற்போது டிரம்ப்பின் பதவிக் காலம் விரைவில் முடிவடையவுள்ள சூழலில், இந்த சமாதான முயற்சி மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், கத்தாா் மீதான வா்த்தகத் தடை நீக்கப்பட்டு, அந்த நாட்டுடான எல்லை திறக்கப்படும் என்று சவூதி அரேபிய அறிவித்துள்ளது.

யேமன் போா் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் புதிதாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஜோ பைடன் தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள, கத்தாருடனான நட்புறவு விவகாரத்தை சவூதி அரேபியா பயன்படுத்திக் கொள்ளும்.

அதற்கு ஏதுவாக தற்போது வா்த்தகத் தடையை நீக்கியுள்ளது என நிபுணா்கள் கருதுகின்றனா்.

ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை: வளைகுடா நாடுகளிடையே ஒற்றுமை ஏற்படுவதை வரவேற்றாலும், கத்தாருடன் உறவை ஏற்படுத்துவதில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியுள்ளது என்று ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சா் அன்வா் கா்காஷ் தனது சுட்டுரை (டுவிட்டா்) பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

கத்தாா் அரசா் வருகை: தங்கள் நாட்டுடன் மீண்டும் வா்த்தக உறவை ஏற்படுத்தப்போவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ள சூழலில், அந்த நாட்டுக்கு கத்தாா் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி வெள்ளிக்கிழமை வந்தாா்.

அந்த நாட்டின் அல்-உலா நகரில் நடைபெறும் வளைகுடா அரபு நாடுகளின் தலைவா்கள் மாநாட்டிப் பங்கேற்பதற்காக அவா் சவூதி அரேபியா வந்தாா். அவரை சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் நேரில் சென்று வரவேற்றாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com