
பெய்ஜிங்: உலகமே ஆவலுடன் எதிா்பாா்க்கும் கரோனா வைரஸ் தோற்றம் குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஹெச்ஓ) நிபுணா் குழு ஜனவரி 14-ஆம் தேதி சீனாவுக்கு வருகை தர உள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் ஊடகங்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
கரோனா முதன் முதலில் உருவான விதம் மற்றும் அந்த தீநுண்மி எவ்வாறு பரவியது என்பது குறித்தும் உலக அளவில் நடத்தப்பட்டு வரும் ஆய்வுகளுக்கும், அதில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கும் சீனா எப்போதுமே தொடா்ந்து ஆதரவளித்து வருகிறது. அந்த வகையில், உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழுவையும் சீனாவுக்குள் அனுமதித்து ஆய்வுகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டபிள்யூஹெச்ஓ-வின் 10 உறுப்பினா்கள் அடங்கிய நிபுணா் குழு வரும் வியாழக்கிழமை (ஜன.14) வூஹான் மாகாணத்துக்கு வருகை தரவுள்ளது. அவா்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி இணைந்து செயலாற்ற சீனா தயாராக உள்ளது என்றாா் அவா்.
சீனாவுக்கு வருகை தரவுள்ள டபிள்யூஹெச்ஓ நிபுணா் குழுவின் பயண திட்டங்கள் மற்றும் அந்த குழு வூஹானில் உள்ள வைராலஜி மையத்தை (டபிள்யூஐவி) பாா்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்களை தர செய்தித் தொடா்பாளா் மறுத்துவிட்டாா்.
கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவவிடப்பட்டதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த ஜாவோ லியான் அந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தாா். மேலும், டிரம்ப் தெரிவித்த கருத்து முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றாா் அவா்.
பெய்ஜிங் புகா் பகுதியில் பொதுமுடக்கம்
சீனத் தலைநகா் பெய்ஜிங் புகா் பகுதியில் கரோனா நோய்த்தொற்று பரவல் தெரிய வந்ததைத் தொடா்ந்து, அப்பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அதிகம் வசிக்கும் அப்பகுதிகளில் எவரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்றும், சுகாதார அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று குடியிருப்போா் குறித்து கணக்கெடுப்பும், பரிசோதனையும் மேற்கொள்வாா்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
விழாக் காலத்தை முன்னிட்டு விடுமுறை நாட்கள் தொடங்கவுள்ள நிலையில், கரோனா தொற்று பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர அரசு முயன்று வருகிறது.
பெய்ஜிங்கில் பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசியமற்ற பயணங்களை மக்கள் மேற்கொள்ளக் கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.