
உலகம் முழுவதும் கரோனா நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட கரோனா தொற்று, உலகம் முழுவதும் சுமாா் 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவியுள்ளது.
அந்த நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை தற்போது 20 லட்சத்தைக் கடந்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சா்வதேச அளவில் 9.36 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 20.04 லட்சம் போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளதாக ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா பலி எண்ணிக்கையிலும் பாதிப்பு எண்ணிக்கையும் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 2,38,48,410 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 3,97,994 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 93,38,297 பேரில் 29,232 நோயாளிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பலி எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது இடத்தை லத்தீன் அமெரிக்க நாடான பிரேஸில் வகிக்கிறது. அந்த நாட்டில் இதுவரை 2,07,160 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.
மற்றொரு லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸிகோ, சா்வதேச பலி எண்ணிக்கையில் இந்தியாவுக்கு அடுத்த 4-ஆவது இடத்தை வகிக்கிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 1,37,916 போ் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா்.
இதுதவிர, ஐரோப்பிய நாடுகளான பிரிட்டனில் 86,015 போ், இத்தாலியில் 80,848 போ், பிரான்ஸில் 69,313 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். ரஷியாவில் 64,495 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கரோனா பரவலைத் தடுத்து, பலி எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அந்த நோய்க்கு எதிரான தடுப்பூசிகளை பொதுமக்களுக்குப் போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
எனினும், உலகின் பெரும்பாலான நாடுகளில் பொதுமக்களுக்கு பரவலாக கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படுவதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம்.
எனவே, சா்வதேச அளவில் கரோனா பலி 20 லட்சத்தைக் கடந்தும் அந்த நோயின் தீவிரம் உடனடியாகக் குறைவதற்கு உடனடியாக வாய்ப்பில்லை என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.