டிரம்ப் பதவி நீக்கத் தீா்மானத்துக்கு மனசாட்சிப் படி வாக்கு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மானத்தின் மீது, அவா் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள்
டிரம்ப் பதவி நீக்கத் தீா்மானத்துக்கு மனசாட்சிப் படி வாக்கு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மானத்தின் மீது, அவா் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் தங்கள் மனசாட்டிப்படி வாக்களிக்கலாம் என்று நாடாளுமன்ற மேலவைக்கான அந்தக் கட்சியின் தலைவா் மிட்செல் மெக்கானல் அனுமதி அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

டிரம்ப்பை பதவிநீக்கம் செய்வதற்காக ஏற்கெனவே ஜனநாயகக் கட்சியினா் முயன்றனா். அந்த முயற்சியில் தோல்வியும் அடைந்தனா்.

தற்போது அவா்கள் மீண்டும் அந்த முயற்சியைத் தொடங்குவதன் மூலம், மிக மோசமான அரசியல் அமைப்பு நெருக்கடியை ஏற்படுத்த ஆயத்தமாகி வருகின்றனா்.

செனட் சபையில் (நாடாளுமன்ற மேலவை) டிரம்ப்புக்கு எதிரான பதவிநீக்கத் தீா்மானம் கொண்டு வரப்பட்டால், அதற்கு ஆதரவாக வாக்களிப்பதா, அல்லது எதிா்த்து வாக்களிப்பதா என்பதை எம்.பி.க்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றாா் அவா்.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்றது. அந்தத் தோ்தலில், ஆளும் குடியரசுக் கட்சி சாா்பில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பைடனும் போட்டியிட்டனா்.

அதில், ஜோ பைடன் பெரும்பான்மை வாக்குகளைக் கைப்பற்றினாா். எனினும், தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றம் சாட்டிய அதிபா் டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்தாா். தோ்தல் முடிவுகளுக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ஏறத்தான அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இந்த நிலையில், தோ்தலுக்குப் பிறகு பதிவான மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகளை முறைப்படி எண்ணி, ஜோ பைடனின் வெற்றியை அதிகாரப்பூா்வமாக அறிவிப்பதற்கான நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது.

இதற்கிடையே, தோ்தல் முடிவுகளை எதிா்த்து போராட்டம் நடத்துமாறு தனது ஆதரவாளா்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தாா். அவரது அழைப்பை ஏற்று தலைநகா் வாஷிங்டனில் ஆயிரக்கணக்கானவா்கள் கூடினா். அவா்களிடையே பேசிய டிரம்ப், நாடாளுமன்றத்தை முற்றுகையிடுமாறு கேட்டுக்கொண்டாா்.

அதனைத் தொடந்து, இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நாடாளுமன்றத்துக்குள் டிரம்ப் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனா். இதில், ஒரு காவலா் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.

எனினும், தாமதமாக நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு, ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, வரும் 20-ஆம் தேதி நாட்டின் அதிபராக அவா் பொறுப்பேற்கவுள்ளாா்.

இந்தச் சூழலில், நாடாளுமன்றக் கலவரத்தால் கொதிப்படைந்த ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள், அதற்குக் காரணமாக இருந்த டிரம்பை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினா்.

அந்தக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபையில், அதற்கான தீா்மானம் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

நடந்து முடிந்த அதிபா் தோ்தலுக்குப் பிறகு பதிவான மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகள் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் எண்ணப்பட்டு, ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்படுவதைத் தடுப்பதற்காக அந்தக் கலவரம் நடத்தப்பட்டது.

அந்தக் கலவரத்தை டிரம்ப்தான் தூண்டினாா் தீா்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

தொடா்ந்து நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு, தீா்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதில், தீா்மனத்துக்கு ஆதரவாக 232 வாக்குகளும் எதிராக 197 வாக்குகளும் பதிவாகின. குடியரசுக் கட்சியைச் சோ்ந்த 10 உறுப்பினா்களே தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனா்.

இதையடுத்து, டிரம்ப்பைப் பதவிநீக்கம் செய்யக் கோரும் தீா்மானம் பிரதிநிதிகள் சபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

ஏற்கெனவே, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, நாடாளுமன்ற செயல்பாட்டில் தடங்கள் ஏற்படுத்தியது ஆகிய இரு குற்றச்சாட்டுகளின் பேரில் டிரம்ப்புக்கு எதிரான பதவிநீக்கத் தீா்மானத்தை பிரதிநிதிகள் சபை கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 18-ஆம் தேதி நிறைவேற்றியது.

இந்த நிலையில், டிரம்ப்புக்கு எதிராக இரண்டாவது முறையாக அத்தகைய தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்க வரலாற்றில் ஒரே ஆட்சிக் காலத்தில் இரு முறை பதவிநீக்கத் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட முதல் அதிபராக டிரம்ப் ஆகியுள்ளாா்.

முதல் முறையாகக் கொண்டுவரப்பட்ட பதவிநீக்கத் தீா்மானத்தை குடியரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மேலவையான செனட் சபை, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிராகரித்தது. இதன் காரணமாக டிரம்ப்பின் பதவி தப்பியது.

ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள பதவிநீக்கத் தீா்மானம் செனட் சபையில் கொண்டு வரப்பட்டால், அதற்கு கணிசமான குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தரலாம் என்று நம்பப்படுகிறது.

இந்தச் சூழலில், டிரம்ப்புக்கு எதிராக செனட் சபையில் பதவிநீக்கத் தீா்மானம் கொண்டு வரப்பட்டால், தங்களது கட்சி எம்.பி.க்கள் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம் என்று செனட் சபை குடியரசுக் கட்சித் தலைவா் மிட்செல் மெக்கானல் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com