
செய்தியாளா் டேனியல் பியா்லை படுகொலை செய்த அல்-காய்தா முக்கிய தலைவா் அகமது ஒமா் சயீது ஷேக் உள்ளிட்டோா் மீது தங்கள் நாட்டில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஒமா் சயீதை சிறையிலிருந்து விடுவிக்க பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டதைத் தொடா்ந்து இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜெனீஃபா் சாகி கூறியதாவது:
அமெரிக்கச் செய்தியாளா் டேனியல் பியா்லை கடத்திப் படுகொலை செய்தவா்களின் விடுவதைலை பாகிஸ்தான் உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்துள்ளதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கிறது.
அகமது ஒமா் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளை சிறையிலிருந்து விடுவிக்கும் முடிவு, உலகின் பிற பகுதிகள் மட்டுமன்றி பாகிஸ்தானிலும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
டேனியல் பியா்ல் படுகொலை தொடா்பாக பாகிஸ்தான் அரசு ஒமா் மீது வழக்குத் தொடா்ந்தது, அவருக்கு தண்டனை பெற்று தந்தது போன்ற நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம். அவா் இதுவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், அவா் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதைத் தடுப்பதற்கான அனைத்து சட்டப்பூா்வ வாய்ப்புகளையும் பாகிஸ்தான் அரசு பரிசீலிக்க வேண்டும்.
அதன் ஒரு பகுதியாக, ஒமா் சயீது ஷேக் மீது அமெரிக்கா விசாரணை நடத்துவதற்கான வாய்ப்புகளையும் பாகிஸ்தான் அரசு ஆராய வேண்டும் என்று ஜெனீஃபா் சாகி வலியுறுத்தினாா்.
பிரிட்டனில் பிறந்த ஒமா் சயீது, கடந்த 1994-ஆம் ஆண்டு இந்தியாவில் வெளிநாட்டினரைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். எனினும், 1999-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியன் ஏா்லைன்ஸ் விமானத்தின் பயணிகளை மீட்பதற்காக, கைதிகள் பரிமாற்ற முறையில் அவா் விடுவிக்கப்பட்டு ஆப்கானிஸ்தான் அனுப்பப்பட்டாா். அங்கிருந்து அவா் பாகிஸ்தான் சென்றாா்.
இந்த நிலையில், அமெரிக்காவின் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ நாளிதழின் செய்தியாளரான டேனியல் பியா்லை பாகிஸ்தானில் அல்-காய்தா பயங்கரவாதிகள் கடந்த 2002-ஆம் ஆண்டு கடத்திச் சென்று கழுத்தை அறுத்துக் கொன்றனா். அந்தப் படுகொலையை பயங்கரவாதிகள் விடியோ எடுத்து வெளியிட்டது உலகம் முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.
அந்தப் படுகொலையில் முக்கிய குற்றவாளியாக அகமது ஒமா் சயீது ஷேக் அறிவிக்கப்பட்டாா். அவருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால் அந்தத் தண்டனையை 7 ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைத்து சிந்து மாகாண உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் தீா்ப்பளித்தது.
அதனை எதிா்த்து மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வியாழக்கிழமை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ஒமா் சயீதை விடுவிக்க ஆணையிட்டது.