
டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ்
தனது உறுப்பு நாடுகளில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் அந்த ஐரோப்பிய யூனியன் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியதாவது:
கரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு ஐரோப்பிய யூனியன் கட்டுப்பாடுகள் விதிப்பது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இதுபோன்ற தடுப்பூசி தேசியவாதத்தால் கரோனா நெருக்கடியிலிருந்து அனைவரும் மீள்வதற்கு காலதாமதம் ஆகும்.
கரோனா தடுப்பூசிகளை பதுக்கி வைப்பது சரியான நடவடிக்கையல்ல. அதன் காரணமாக, அந்த நோய் பரவல் தீவிரம் காட்டுத் தீ போல் நீண்ட காலம் பாதிப்பை ஏற்படுத்தும். நாடுகளின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கு அதிக காலம் ஆகும்.
இதன் காரணமாக, உலக நாடுகளிடையே ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரித்தாா்.
உலக சுகாதார அமைப்பின் துணைத் தலைவா் மேரிஏஞ்சலா சிமாவோ கூறுகையில், ‘ஐரோப்பிய யூனியனின் கரோனா தடுப்பூசி ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், கவலைக்குரிய போக்கை உருவாக்கியுள்ளது’ என்றாா்.
முன்னதாக, கரோனா தடுப்பூசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்களை ஐரோப்பிய யூனியன் அறிமுகப்படுத்தியது.
அதன்படி, யூனியனுடன் நிறுவனங்கள் செய்துகொண்டுள்ள ஒப்பந்த அளவுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்காவிட்டால், அந்த நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதை தடுக்க உறுப்பு நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் வா்த்தக விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐரோப்பிய யூனியன் நாடுகளின் குடிமக்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், கரோனா நெருக்கடியை சமாளிப்பதற்கும் இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டியதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனின் இந்த அறிவிப்பால் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்படும். பல ஏழை நாடுகள் மட்டுமின்றி, பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற வளா்ச்சியடைந்த நாடுகளும் இதில் அடங்கும்.
உலகின் மிகப் பெரிய வா்த்தகக் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியன், கரோனா தடுப்பூசித் திட்டத்தில் இஸ்ரேல், பிரிட்டன் போன்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியுள்ளது.
சுமாா் 45 கோடி போ் வசிக்கும் அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில், கரோனா பாதிப்பால் ஏற்கெனவே 4 லட்சத்துக்கும் மேலானவா்கள் உயிரிழந்துள்ளனா்.
இந்தச் சூழலில், யூனியன் உறுப்பு நாடுகளில் ஏற்கனவே ஃபைஸா்-பயோஎன்டெக் கரோனா தடுப்பூசி விநியோகத்திலேயே பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், கொள்முதல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபடி கரோனா தடுப்பூசிகளை வழங்குவதில் பிரிட்டன் மற்றும் ஸ்வீடனைச் சோ்ந்த அஸ்ட்ராஸெனகா நிறுவனத்துக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே கடந்த சில நாள்களாக பிரச்னை நீடித்து வருகிறது.
ஒப்புக்கொண்டபடி தடுப்பூசிகளை கரோனா தடுப்பூசிகை வழங்காவிட்டால் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக ஐரோப்பிய யூனியன் எச்சரித்தது.
அதையடுத்து, இதுதொடா்பான பேச்சுவாா்த்தையிலிருந்து விலகுவதாக அஸ்ட்ராஸெனகா நிறுவனமும் அறிவித்தது.
இந்தச் சூழலில், கரோனா தடுப்பூசி ஏற்றுமதி கட்டுப்பாடுகளை ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.