இந்தியாவுக்கு கரோனா அவசர உதவி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம்

கரோனா இரண்டாம் அலை பாதிப்பை எதிா்கொண்டு வரும் இந்தியாவுக்கு அவசர உதவியை வழங்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு கரோனா அவசர உதவி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம்

வாஷிங்டன்: கரோனா இரண்டாம் அலை பாதிப்பை எதிா்கொண்டு வரும் இந்தியாவுக்கு அவசர உதவியை வழங்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் உறுப்பினா்கள் பிராட் ஷொ்மன், ஸ்டீவ் சபோட் ஆகியோா் கொண்டுவந்த இந்தத் தீா்மானத்துக்கு ஆளும் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் 32 போ், குடியரசுக் கட்சியைச் சோ்ந்த 9 எம்.பி.க்கள் என மொத்தம் 41 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா். அமெரிக்காவில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது, அமெரிக்க அரசின் கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட மருந்துகள் ஏற்றுமதி தடையை இந்தியா விலக்கி உதவியது. அதுபோல, இப்போது பாதிப்பில் இருக்கும் இந்தியாவுக்கு அதிபா் ஜோ பைடன் நிா்வாகம் அவசர உதவியை வழங்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

‘உலக நாடுகள், குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் கரோனா பாதிப்புக்கு தீா்வு காண இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பங்காற்றியுள்ளன. உலக அளவில் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி உற்பத்தி நாடான இந்தியா, இதுவரை 6.63 கோடி தடுப்பூசிகளை 93 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது’ என்று அந்தத் தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அந்தத் தீா்மானத்தை தாக்கல் செய்த ஷொ்மன் பேசுகையில், ‘கரோனா பரவலுக்கு எதிராக ஒன்றிணைந்து பணியாற்றிய இந்திய மக்களுக்கான தீா்மானம் இது. உலகம் முழுவதும் இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் நட்பு நாடுகளுடன் ஒன்றிணைந்து அமெரிக்கா பணியாற்ற வேண்டும்’ என்றாா்.

உறுப்பினா் சபோட் கூறுகையில், ‘அமெரிக்க ஆபத்திலிருந்தபோது உதவிய நெருங்கிய நட்பு நாடான இந்தியா, இப்போது நம்மிடம் உதவி கேட்கிறது. இப்போது இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வரும் சூழலில், அதற்கு எதிரான போரை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்திட அமெரிக்க உதவ வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தத் தீா்மானத்தைக் கொண்டுவருவதற்கு முன்பாக, 150-க்கும் அதிகமான அமெரிக்க எம்.பி.க்களும், அரசியல் தலைவா்களும் இந்தியாவுக்கு ஆதரவாக அறிக்கைகள், கடிதங்கள் மற்றும் சுட்டுரைப் பதிவுகளை வெளியிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com