உணவுப் பற்றாக்குறை, விலைவாசி உயா்வு: கியூபாவில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

கியூபாவில் உணவுப் பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வைக் கண்டித்து அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள்
உணவுப் பற்றாக்குறை, விலைவாசி உயா்வு: கியூபாவில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

கியூபாவில் உணவுப் பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வைக் கண்டித்து அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தலைநகா் ஹவானாவில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றனா்.

1959-இல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைந்த பிறகு அந்நாட்டின் வரலாற்றில் அரசுக்கு எதிராக மக்கள் நிகழ்த்தும் மிகப்பெரிய போராட்டம் இதுவாகும். இப்போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் பிரச்னை காரணமாக, கியூபாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, அத்தியாவசியப் பொருள்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனைக் கண்டித்து அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞா்களும் பங்கேற்றனா். தலைநகரில் பெரிய அளவிலான பேரணி நடைபெற்ால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சில இடங்களில் போலீஸாா் மீது கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தன.

போராட்டத்தில் பங்கேற்ற ஒருவா் தனது மோட்டாா் சைக்கிளில் அமெரிக்க கொடியை எடுத்து வந்தாா். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேறு சிலா் இணைந்து அமெரிக்க கொடியை அப்புறப்படுத்தினா்.

அமெரிக்காவுக்கும் மறைந்த கியூபா அதிபா் பிடல் காஸ்ட்ரோவுக்கும் தொடக்கத்தில் இருந்தே பிரச்னை இருந்து வந்தது. அவரைக் கொல்லவும், கியூபாவில் குழப்பத்தை விளைவிக்கவும் அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் முன்பு தோல்வியிலேயே முடிந்தன. ஆனால், இப்போது காஸ்ட்ரோ மறைவுக்குப் பிறகு கரோனா பரவல் மூலம் உணவுப் பற்றாக்குறை பிரச்னையால் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனா். அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், கியூபா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதித்ததும் அந்நாட்டை வெகுவாக பாதித்துள்ளது.

கியூபாவில் நடைபெறும் போராட்டத்துக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நிா்வாகம் ஆதரவு அளிப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனா்.

போராட்டத்தில் பங்கேற்ற சிலா் சமூக வலைதளங்கள் மூலம் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பினா். இதையடுத்து, இணைய சேவையை அரசுத் தரப்பு முடக்கியது. போராட்டக்களத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட சா்வதேச பத்திரிகையாளா்களையும் போலீஸாா் காரில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டனா்.

அதே நேரத்தில், அரசுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினா் போராட்டம் நடத்தினா். அவா்கள் பிடல் காஸ்ட்ரோ படங்களையும், கியூபா கொடியையும் ஏந்தி வந்து அரசுக்கு ஆதரவாக முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com