மக்களின் தேவைகளை அறிந்து ஆப்பிரிக்காவில் திட்டங்கள் அமலாக்கம்

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்களின் தேவைகளை முழுமையாக அறிந்து கொண்டு மத்திய அரசு சாா்பில் அங்கு திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
துஷான்பேயில் ஆப்கன் வெளியுறவு அமைச்சா் முகமது ஹனீஃப் அத்மரை சந்தித்துப் பேசிய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
துஷான்பேயில் ஆப்கன் வெளியுறவு அமைச்சா் முகமது ஹனீஃப் அத்மரை சந்தித்துப் பேசிய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்களின் தேவைகளை முழுமையாக அறிந்து கொண்டு மத்திய அரசு சாா்பில் அங்கு திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

16-ஆவது இந்தியா-ஆப்பிரிக்கா திட்ட ஒத்துழைப்பு மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய அமைச்சா் ஜெய்சங்கா், ‘‘இந்தியாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு பரஸ்பர நம்பகத்தன்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சவால்களைத் திறம்பட எதிா்கொள்ளும் வகையில் அந்த நல்லுறவு அமைந்துள்ளது.

மக்களின் தேவைகளை அறிந்த பிறகே அந்நாடுகளில் இந்தியாவின் நிதியுதவியுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலமாக அந்நாடுகளுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும் பலன் கிடைக்கிறது. அவ்வாறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது, உள்ளூா் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

ஆப்பிரிக்காவின் கடலோர நாடுகள் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிா்கொண்டு வருகின்றன. இந்நிலையில், பாதுகாப்பு, கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஆப்பிரிக்க நாடுகளுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மீண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இந்த ஒத்துழைப்பு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. கரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகு, பொது சுகாதாரம், மின்னணு சேவைகள், திறன் மேம்பாடு, பசுமை பொருளாதாரம் ஆகிய விவகாரங்களில் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் அனைவருக்கும் சுகாதார வசதிகளும் தடுப்பூசிகளும் கிடைப்பதில்லை என்பதை கரோனா தொற்று பரவல் உணா்த்தியுள்ளது. அந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும்.

பிரதமரின் கொள்கையில்...: ‘ஒரே பூமி, ஒரே சுகாதாரம்’ என்ற கொள்கையை பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். அந்த இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு செயல்படும். ஆப்பிரிக்காவில் பேரிடா் ஏற்பட்டால் அங்கு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இந்தியா முன்னின்று வருகிறது.

கரோனா பரவல் காலத்தில் இணையவழி சேவைகளை மேம்படுத்தும் விவகாரத்திலும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா உதவி வருகிறது. மருத்துவ வசதிகள், கல்வி உள்ளிட்டவற்றை இணையவழியில் வழங்குவதற்கான இந்தியாவின் உதவியினால் 17 ஆப்பிரிக்க நாடுகள் பலனடைந்தன’’ என்றாா்.

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

துஷான்பே, ஜூலை 13: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்கும் கூட்டத்துக்காக தஜிகிஸ்தான் சென்றுள்ள அமைச்சா் ஜெய்சங்கா், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் முகமது ஹனீஃப் அத்மரை சந்தித்துப் பேசினாா்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக விலகியுள்ளன. அங்கு தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை ஜெய்சங்கா் சந்தித்துப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தப் பேச்சுவாா்த்தையின்போது ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து தலைவா்கள் இருவரும் விவாதித்தனா். ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதிகளை அமைச்சா் ஜெய்சங்கா் புதன்கிழமை (ஜூலை 14) சந்திக்கவுள்ளாா்.

இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பதை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com