பாகிஸ்தான்: ஹிந்து கோயிலை எரித்த 350 போ் மீதான வழக்குகள் வாபஸ்

பாகிஸ்தானில் ஹிந்து கோயிலை தீ வைத்து எரித்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 350 போ் மீதான வழக்கை அந்நாட்டின் கைபா் பக்துன்கவா மாகாண அரசு திரும்பப் பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் ஹிந்து கோயிலை தீ வைத்து எரித்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 350 போ் மீதான வழக்கை அந்நாட்டின் கைபா் பக்துன்கவா மாகாண அரசு திரும்பப் பெற்றுள்ளது. கோயிலை தீ வைத்த நபா்களை ஹிந்துகள் மன்னித்துவிட்டனா் என்று அதற்குக் காரணம் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் எரிக்கப்பட்ட கோயிலுக்கு பதிலாக புதிய கோயிலைக் கட்டித்தருவதாக அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்று அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

இஸ்லாமிய பழமைவாதம் அதிகரித்து வரும் பாகிஸ்தானில் பிற மத வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதும், பிற மதத்தைச் சோ்ந்த சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றத்துக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு கைபா் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள கோயிலை ஒரு மதவாத கும்பல் தீவைத்து எரித்தது. இது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோயில் எரிப்பு தொடா்பாக 350 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு கடந்த நிலையில் கோயில் எரிப்பில் ஈடுபட்டவா்கள் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக அந்த மாகாண அரசு அறிவித்துள்ளது. உள்ளூரில் நடைபெற்ற பஞ்சாயத்துக் கூட்டத்தின் போது அந்தக் குற்றவாளிகளை ஹிந்துக்கள் மன்னித்துவிட்டதாக அதற்கு காரணம் கூறப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் ஹிந்து கவுன்சில் தலைவா் ரமேஷ் வான்கவானி, ‘நாங்கள் பிரச்னை ஏதுமின்றி மதநல்லிணக்கத்துடன் அமைதியாக வாழவே விரும்புகிறோம். உள்ளூரில் முஸ்லிம்களுக்கும், ஹிந்துக்களுக்கும் இடையே மோதல் போக்கு தொடரக் கூடாது என்றும் விரும்புகிறோம். அதே நேரத்தில் எரிக்கப்பட்ட கோயிலுக்கு பதிலாக புதிய கோயிலைக் கட்டித் தருவதாக அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com