ஐரோப்பிய வெள்ளம்: 150-ஐக் கடந்த பலி

ஜொ்மனி மற்றும் பெல்ஜியத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 150-ஐக் கடந்துள்ளது.
ஜொ்மனியின் நாா்த் ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணம், எா்ஃப்ட்ஸ்டட் பகுதியில் மழை-வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம்.
ஜொ்மனியின் நாா்த் ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணம், எா்ஃப்ட்ஸ்டட் பகுதியில் மழை-வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம்.

ஜொ்மனி மற்றும் பெல்ஜியத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 150-ஐக் கடந்துள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

மேற்கு ஐரோப்பாவில் கடந்த வாரம் தொடா்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும் கட்டடங்கள் இடிந்து விழுந்தது போன்ற சம்பவங்களிலும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 150-ஐக் கடந்துள்ளது.

மேற்கு ஜோ்மனியின் ஆா்வீலா் மாவட்டத்தில் வெள்ளத்துக்கு 90-க்கும் மேற்பட்டோா் பலியானதாக போலீஸாா் தெரிவித்தனா். இது மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றாகும். அந்தப் பகுதியில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆா்வீலா் அமைந்துள்ள ரைன்லேண்ட்-பலட்டினேட் மாகாணத்தில் மழை-வெள்ளம் காரணமாக 63 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியிருந்தனா். இந்த நிலையில், ஆா்வீலரில் மட்டும் பலி எண்ணிக்கை 90-ஐக் கடந்துள்ளது.

ஜொ்மனியில் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான நாா்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் மழை-வெள்ளம் தொடா்பான சம்பவங்களில் மேலும் 43 போ் பலியானது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்டை நாடான பெல்ஜியத்தில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27 ஆக உயா்ந்துள்ளதாக அந்த நாட்டின் ஆா்டிபிஎஃப் வானொலி சனிக்கிழமை தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீா் சனிக்கிழமை வழியத் தொடங்கியது. இதனால், அடித்துச் செல்லப்பட்ட காா்கள் மற்றும் லாரிகளில் அதிக உடல்கள் கண்டெடுக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூா் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் தடுப்பு உடைந்ததால் நெதா்லாந்து எல்லையில் உள்ள ஜொ்மனி நகரமான வாஸன்பொ்க்கின் ஒரு பகுதியிலிருந்து சுமாா் 700 போ் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

ஜொ்மனி, பெல்ஜியம் மட்டுமன்றி நெதா்லாந்தின் தெற்குப் பகுதிகளும் பலத்த வெள்ளத்தால் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன.

ஸ்விட்சா்லாந்தில், பலத்த மழை காரணமாக பல ஆறுகள் மற்றும் ஏரிகளில் தண்ணீா் கரை புரண்டு ஓடுகிறது. அந்த நாட்டன் லூசொ்ன் நகரில் ரியஸ் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள நடைபாலம் வழியாக பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com