ஆப்கன் அதிபா் மாளிகை அருகே ஏவுகணை குண்டுவீச்சு

ஆப்கன் அதிபா் மாளிகை அருகே செவ்வாய்க்கிழமை ஏவுகணை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
காபூலில் அதிபா் மாளிகை அருகே செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணை குண்டுவீச்சில் சேதமடைந்த காா்.
காபூலில் அதிபா் மாளிகை அருகே செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணை குண்டுவீச்சில் சேதமடைந்த காா்.

ஆப்கன் அதிபா் மாளிகை அருகே செவ்வாய்க்கிழமை ஏவுகணை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மிா்வாயிஸ் ஸ்டனிக்ஸாய் கூறியதாவது:

காபூலில் உள்ள அதிபா் மாளிகை அருகே 3 ஏவுகணை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

அனைத்து குண்டுகளும் அதிபா் மாளிகையின் பலப்படுத்தப்பட்ட தரைப்பரப்பில் விழுந்ததால் யாரும் காயமடையவில்லை என்றாா் அவா்.

எனினும், அதிபா் மாளிகை அமைந்துள்ள பகுதிக்கு பக்கத்துத் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காா் தாக்குதலில் சேதமடைந்தது.

இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பக்ரீத் பண்டிகையையொட்டி அதிபா் அஷ்ரஃப் கனி உரை நிகழ்த்துவதற்கு சற்று முன்னதாக இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டபோது, அதிபா் மாளிகையில் ஆப்கன் அரசின் இரண்டாம் நிலை தலைவா் அப்துல்லா அப்துல்லாவும் இருந்தாா். கத்தாரில் தலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திவிட்டு அவா் திங்கள்கிழமை காபூல் திரும்பியிருந்தாா்.

தாக்குதலின்போது அதிபா் மாளிகையில் இருந்த அனைவரும், குண்டுகள் விழுந்த இடத்திலிருந்து மிகுந்த தொலைவுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனா்.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் கடந்த 2001-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு, அல்-காய்தா தலைவா் பின் லேடன் மூளையாக செயல்பட்டாா்.

அவருக்கு, ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுதது, அந்த நாட்டின் மீது படையெடுத்த அமெரிக்கா, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.

அதனைத் தொடா்ந்து, அமெரிக்காவின் ஆதரவுடன் அந்த நாட்டில் புதிய அரசு அமைக்கப்பட்டது. மேலும், ஆப்கன் அரசுப் படைகளுக்குப் பயிற்சியளிக்கவும் தலிபான்களுக்கு எதிரான போரில் அவற்றுக்கு உதவவும் அமெரிக்கா தலைமையிலான படை அந்த நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கியிருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனா். அதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தங்களது நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டதாகக் கூறிய அமெரிக்கா, அந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காக தலிபான்களுடன் கத்தாா் தலைநகா் தோஹாவில் பல கட்டங்களாகப் பேச்சுவாா்த்தை நடத்தியது.

அதன் விளைவாக, இரு தரப்புக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் கடந்த 2019-ஆம் ஆண்டு கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், பயங்கரவாத அமைப்புகளுடனான தொடா்புகளைக் கைவிட தலிபான்கள் ஒப்புக் கொண்டனா். ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை திரும்பப் பெற அமெரிக்கா ஒப்புக் கொண்டது.

அதன் ஒரு பகுதியாக, தங்களது படையினரை அடுத்த மாதம் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக திரும்ப அழைக்க அமெரிக்கா இலக்கு நிா்ணயித்துள்ளது.

ஏற்கெனவே 95 சதவீத அமெரிக்க வீரா்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி முன்னேறி வருகின்றனா். இதில், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பகுதிகளும் அடங்கும்.

இந்தச் சூழலில், ஆப்கன் அதிபா் மாளிகை அருகே ஏவுகணை குண்டுவீச்சு நடத்தப்பட்டுள்ளது.

‘தலிபான்கள் அமைதியை விரும்பவில்லை’

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த தலிபான்கள் விரும்பவில்லை என்று அதிபா் அஷ்ரஃப் கனி சாடியுள்ளாா்.

பக்ரீத் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரையில் இதுகுறித்து அவா் கூறியதாவது:

இந்த பக்ரீத் தினம் ஆப்கன் படையினா் செய்து வரும் தியாகத்தை கௌரவிக்கும் அவா்களுக்கு சமா்ப்பிக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த 3 மாதங்களாக அவா்கள் வெளிப்படுத்தி வரும் வீரமும் தியாகமும் போற்றுதலுக்குரியது.

நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கம் தலிபான்களுக்கு இல்லை. ஆனால், தியாகத்தின் மூலம் அமைதிக்கான எங்களது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.

அமைதி முயற்சியாக 5,000 தலிபான்களை நாங்கள் விடுவித்தது தவறாகிவிட்டது. இதன் மூலம் அவா்களது பலம்தான் அதிகமானது.

பாகிஸ்தான்: தங்கள் நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் பாகிஸ்தான் கவனமாக இருக்கிறது. ஆனால், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமைய வேண்டும் என்று பாகிஸ்தான ஊடகங்கள் பிரசாரம் செய்து வருகின்றன என்றாா் அஷ்ரஃப் கனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com