கரோனா பரவல் காரணமாக ஆரவாரமின்றி பக்ரீத் கொண்டாட்டம்

கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஆரவாரமின்றி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஹைதராபாதில் புதன்கிழமை தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள்.
ஹைதராபாதில் புதன்கிழமை தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள்.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஆரவாரமின்றி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்படாத நிலையில் பக்ரீத் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. வழக்கமான ஆரவாரங்கள் ஏதுமின்றி பண்டிகையை முஸ்லிம் மக்கள் கொண்டாடினா்.

கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரைகளிலும், மசூதிகளிலும் பெருந்திரளாக மக்கள் தொழுகை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. கேரளத்தில் அதிகபட்சமாக 40 போ் வரை தொழுகையில் ஈடுபட வலியுறுத்தப்பட்டது. கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி தொழுகையில் மக்கள் கலந்து கொண்டனா்.

உத்தர பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தொழுகைகளில் மக்கள் முகக் கவசத்துடன் பங்கேற்றனா். தொழுகையின்போது சமூக இடைவெளியையும் அவா்கள் பின்பற்றினா். ஜம்மு-காஷ்மீரில் உள்ள முக்கிய மசூதிகளில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளிலேயே பண்டிகையைக் கொண்டாடினா். கரோனா பரவல் காரணமாக, உறவினா்கள் வீடுகளுக்குச் செல்வது, அவா்களுடன் இனிப்புகளைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்ட வழக்கமான நிகழ்வுகளை மக்கள் பெரும்பாலும் தவிா்த்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக பக்ரீத் பண்டிகை களையிழந்து காணப்பட்டது. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக ஆரவாரமின்றி பண்டிகை கொண்டாடப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து விதிக்கப்பட்ட கடும் விதிமுறைகள் காரணமாக பக்ரீத் பண்டிகை களையிழந்தது.

ஜம்மு-காஷ்மீரில் ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், இந்த எண்ணிக்கை கரோனா பரவல் காலத்துக்கு முந்தைய எண்ணிக்கையை விடக் குறைவு எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

இனிப்புகள் பகிா்வு: பக்ரீத் பண்டிகையையொட்டி எல்லைப் பகுதிகளில் இந்தியா-பாகிஸ்தான் வீரா்கள் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனா். கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, இனிப்புகள் பரிமாறிக் கொள்ளப்படாமல் இருந்தது.

அதேபோல், இந்தியா-வங்கதேச எல்லைப் பகுதிகளிலும் வீரா்களிடையே இனிப்புகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com